எகிறும் சர்க்கரை விலை: எத்தனால் பெட்ரோல் தான் காரணமா? - சர்ச்சையும் பின்னணியும்

எகிறும் சர்க்கரை விலை: எத்தனால் பெட்ரோல் தான் காரணமா? - சர்ச்சையும் பின்னணியும்
Updated on
4 min read

இந்தியாவை பொறுத்தவரை நவராத்திரி விழா தொடங்கும்போதுதான் பண்டிகை கால தேவையை முன்னிட்டு சர்க்கரை விலை சற்றே உயரும். ஆனால், இந்த ஆண்டு வழக்கத்துக்கு மாறாக ஆகஸ்ட் மாதத்திலேயே சர்க்கரை விலை தாறுமாறாக உயர்ந்துள்ளதோடு, சர்க்கரை இறக்குமதிக்கு மத்திய அரசு அனுமதி அளிக்கும் அளவுக்கு நிலைமை சென்றுள்ளது.

இதைச் சுற்றி, உள்நாட்டில் உற்பத்தி குறைந்தது, இ20 பெட்ரோலுக்காக கரும்பு கொள்முதல், காலநிலை மாற்றம், பதுக்கல் போன்று பல்வேறு வாதங்களும் முன்வைக்கப்படுகின்றன.

உலகளவில் சர்க்கரையை அதிகளவில் உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியலில் 2-வது இடத்தில் இருக்கிறது இந்தியா. ஆண்டுதோறும் சராசரியாக 30 மில்லியன் டன் சர்க்கரை உற்பத்தி செய்கிறது. அதில், 28 மில்லியன் டன் சர்க்கரையை உள்நாட்டிலேயே பயன்படுத்துகிறது. மீதத்தை ஏற்றுமதி செய்கிறது என்பது புள்ளிவிவரம்.

இந்நிலையில், அக்டோபர் 31 2026 வரை 10 லட்சம் டன் சர்க்கரை இறக்குமதி செய்து கொள்ளலாம் என்று மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.

40 டூ 50% அதிகரிப்பு:

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சர்க்கரை விலை கடுமையாக அதிகரித்துள்ளது. அதுவும் ஆகஸ்ட் 2025 உடன் ஒப்பிடுகையில் 2026 ஆகஸ்ட்டில் சில்லறை மற்றும் மொத்த விற்பனையில் சர்க்கரை விலை 40% வரை அதிகரித்துள்ளது. சில மாநிலங்களில் விலையேற்றம் 50% வரை உள்ளது.

உத்தராகண்ட், பஞ்சாப், மத்தியப் பிரதேசம், ஒடிசா மாநிலங்களில் சில்லறை சந்தையில் சர்க்கரை விலை கிலோ ரூ.65-ஐ கடந்துள்ளது. அதிகபட்சமாக ஒடிசாவில் ஆகஸ்ட் 23 அன்று ஒரு கிலோ சர்க்கரை ரூ.67.4-க்கு விற்கப்பட்டது. ஒரு மாதத்துக்கு முன்னர் அங்கு வெறும் ரூ.46.89-க்கே சர்க்கரை விற்கப்பட்டது. சென்னையில் சர்க்கரை விலை ரூ.70-ஐ தொட்டுவிட்டது. இவ்வாறாக ஒரே மாதத்தில் சில்லறை விற்பனையிலும் 45% வரை சர்க்கரை விலை அதிகரித்துள்ளது.

இந்நிலையில், சர்க்கரை விலை சர்ச்சையைப் பற்றியும் அதன் பின்னணி குறித்தும் சற்று சுருக்கமாகப் பார்ப்போம்.

விலையேற்ற விவகாரம் பற்றி ஒரு வாரத்துக்கு முன்னதாகவே எதிர்க்கட்சிகளும் குரல் எழுப்பத் தொடங்கின. ஏற்கெனவே இ-20 பெட்ரோலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துவரும் எதிர்க்கட்சிகள் இப்போது சர்க்கரை விலையேற்றத்தை அத்துடன் தொடர்புபடுத்தியுள்ளன.

கரும்பு தின்ன கைக்கூலியா என்பதுபோல் எதிர்க்கட்சிகளுக்கு சர்க்கரை விலையேற்றமானது விமர்சனத்துக்கு தோதான விவகாரமாகிவிட்டது. அதனால், கரும்பை எத்தனால் தயாரிப்புக்காக மடைமாற்றுவதுதான் சர்க்கரை விலையேற்றத்துக்குக் காரணம் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றன.

எதிர்க்கட்சிகளின் விமர்சனம் இ20-யோடு நின்றுவிட, விவசாயக் குழுக்களைச் சேர்ந்தோர், பண்டிகை காலம் வருவதைக் கணித்து சில வணிகர்கள் போலியான விலையேற்றத்தை உருவாக்கியுள்ளனர் என்று கூறுகின்றனர்.

இந்த நிலையில், அரசுத் தரப்பில், சர்க்கரை விலையேற்ற நிலவரத்தை மிகவும் உன்னிப்பாகக் கவனித்து, கண்காணித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு. சர்க்கரை விலையேற்றத்துக்கு ஐந்து காரணங்களையும் மத்திய அரசு முன்வைக்கிறது.

ஐந்து காரணங்கள் என்னென்ன?

1. உள்நாட்டில் உற்பத்தி சரிவு:

2025-26 கரும்பு அரவைப் பருவத்தின் தொடக்கத்தில், மாநில வேளாண் துறைகள் சுமார் 34.3 லட்சம் டன் சர்க்கரையை உற்பத்தி செய்யப்பட்டலாம் என்று கணித்திருந்தன. அதாவது அதற்குத் தேவையான அளவிலான கரும்பு விளைச்சலை கணித்திருந்தன.

ஆனால், வேளாண் அமைச்சகத்தின் பிந்தைய மறுமதிப்பீடுகள், எதிர்பார்க்கப்படும் நிகர சர்க்கரை உற்பத்தியை சுமார் 30.6 லட்சம் டன்னாகக் குறைத்தன.

இவ்வாறான பல லட்சம் டன் பற்றாக்குறையே விலையுயர்வுக்குக் காரணம் என்கிறது மத்திய அரசு.

2. மழை, வெள்ள பாதிப்பும் நோயும்:

அதேபோல் இந்தப் பற்றாக்குறைக்கு பருவநிலை மாற்றங்கள் மற்றும் பயிர் நோய்த் தாக்குதல் போன்ற காரணிகளையும் குறிப்பிடுகிறது.

மேற்கு மற்றும் தென்னிந்தியாவின் முக்கியமான கரும்பு சாகுபடி பகுதிகளில் இந்தாண்டு பருவமழை சீராக இல்லை. குறிப்பாக மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவின் சில பகுதிகளில் ஒட்டுமொத்த மழைப்பொழிவும் நீண்டகால சராசரியை விட 10% குறைவாக இருந்தது.

பற்றாக்குறை ஒருபுறம் இருக்க, உத்தரப் பிரதேசத்தில் மேக வெடிப்பு சம்பவங்களால் கரும்புத் தோட்டங்களில் நீண்ட நேரம் நீர் தேங்கியது. இதனால், பூஞ்சை தொற்று மற்றும் பூச்சி தாக்குதல் ஏற்பட்டது. குறிப்பாக ரெட் ராட் (Red Rot ) மற்றும் குருத்துப் புழு (Top Borer ) தாக்குதல் அதிகரித்தது.

இவற்றில் ரெட் ராட் நோய் கரும்பு பயிருக்கு கேன்சர் போன்றது. ரெட் ராட் பாதிப்பு பரவலாக தீவிரமாக இருந்ததால் கரும்பு பயிர்கள் பெரும் சேதத்தை சந்தித்தன. அப்படியே தப்பிப் பிழைக்கும் கரும்புப் பயிர்களிலும் சுக்ரோஸ் செறிவு குறைவாகவே இருந்தது. இவையெல்லாம் சேர்ந்தே சர்க்கரை உற்பத்திக் குறைவுக்கு முக்கியக் காரணம் என்கிறது மத்திய அரசு.

3. விழாக்கால தேவை:

ஏற்கெனவே குறிப்பிட்டதுபோல் இந்தியாவில் நவராத்திரி தொடங்கிய விழாக் காலத்தில் சர்க்கரையின் தேவை அதிகரிக்கும். உற்பத்தி குறைவு, தேவை அதிகம் என்பதால் விலையேற்றம் உருவாகியுள்ளது என்கிறது மத்திய அரசு.

4. உலகளாவிய விநியோக பாதிப்பு:

ஜூன் 30 அன்று டன் ஒன்றுக்கு 474 டாலராக இருந்த சர்வதேச சர்க்கரை விலை, ஆகஸ்ட் 20 அன்று 16 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்து டன் ஒன்றுக்கு 552 டாலராக அதிகரித்துள்ளது. சர்வதேச அளவில் சர்க்கரை விநியோகம் குறைந்ததால் சர்வதேச சர்க்கரை விலையும் உயர்ந்துள்ளது.

இந்நிலையில், 2026-27 ஆம் ஆண்டில் உலகளவில் சுமார் 33 லட்சம் டன் சர்க்கரை பற்றாக்குறை இருக்கும் என்று மத்திய அரசு மதிப்பிட்டுள்ளது. இதுவும் சர்க்கரை விலை உயர்வுக்குக் காரணமாக சுட்டிக்காட்டப்படுகிறது.

5. பதுக்கலும் ஒரு காரணம்:

இவற்றுடன் சர்க்கரை உற்பத்தி சரிவால் அச்சப்பட்டு சில தொழில்நிறுவனங்கள் பதுக்கலில் ஈடுபட்டுள்ளதும் சர்க்கரை விலையேற்றத்துக்குக் காரணம் என்று கூறுகிறது.

இ20 (E20) பெட்ரோல் - புகாரும், விளக்கமும்

2026 ஏப்ரல் 1-ல், நாடு முழுவதும் சில்லறை விற்பனை நிலையங்களில் இ20 பெட்ரோல் கட்டாயமாக்கப்பட்டது. சர்க்கரை விலையேற்றத்துக்கு இதையும் ஒரு காரணம் என்கிறார்கள் சில நிபுணர்கள்.

மோசமான பருவமழை, பயிர் நோய்கள் கரும்பு விளைச்சல் சரிவுக்கு முக்கியக் காரணம். அதனால்தான் சர்க்கரை விலையேறியுள்ளது என்பதை மறுப்பதற்கு இல்லை. ஆனால், இ20 உற்பத்திக்காக கணிசமான அளவு கரும்புச் சாறு, சர்க்கரை பாகு மற்றும் B-Heavy வெல்லப்பாகு ஆகியவை நேரடியாக எத்தனால் உற்பத்திக்கு மடைமாற்றிவிடப்பட்டதும் விலையேற்றத்துக்குக் காரணம் என்று அவர்கள் விளக்குகின்றனர்.

இதற்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளதோடு, இ20 பெட்ரோல் எப்படி கரும்பு விவசாயிகளுக்கு உதவியாக இருக்கிறது என்பதையும் விளக்கியுள்ளது.

இந்தியாவில் சராசரியாக 30 மில்லியன் டன் சர்க்கரை உற்பத்தி செய்யப்படுகையில், நுகர்வோர் பயன்பாடு சராசரியாக 28 மில்லியன் டன்னாக இருக்கிறது. எப்பொழுதும் இந்த உபரி ஆலைகளில் கிடப்பில் தேங்கிவிடும்.

அதிகப்படியான இருப்பு, ஆலைகளின் செயல்பாட்டு மூலதனத்தை முடக்கி, கரும்பு விவசாயிகளுக்கு பணம் கொடுப்பதில் தாமதத்தை ஏற்படுத்தும். ஆனால் இ20 பெட்ரோல் திட்டம் ஆலைகளின் நிதி நிலையை வலுப்படுத்தி, விவசாயிகளுக்கு பணம் கொடுப்பதை மேம்படுத்தியுள்ளன என்று மத்திய அரசு விளக்கியுள்ளது.

2014 முதல் 2021 வரை சுமார் 14,600 கோடி ரூபாய் மானியமாக வழங்கப்பட்ட நிலையில், 2021-22 க்குப் பிறகு அதுபோன்ற மானியம் எதுவும் அறிவிக்கப்படவில்லை என்பதை அதற்குச் சான்றாகவும் சுட்டிக் காட்டுகிறது.

மத்திய அரசின் நடவடிக்கைகள் என்ன?

விலையேற்றத்துக்கு காரணங்களை அடுக்கியுள்ள மத்திய அரசு, விலையைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது.

அதன்படி நவம்பர் 30-ம் தேதி வரை சர்க்கரை டீலர்கள் 400 டன் வரை மட்டுமே ஸ்டாக் வைத்துக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.

செப்டம்பர் 1-ம் தேதி முதல் மொத்த நுகர்வோர் (பல்க் கன்ஸ்யூமர்ஸ்), 15 நாட்கள் நுகர்வுக்கு மேல் இருப்பு வைத்திருக்க தடை விதிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பதுக்கலை தடுக்க சர்க்கரை ஆலைகளில் மத்திய, மாநில கூட்டு குழுக்கள் சோதனை செய்ய உத்தரவிட்டுள்ளது.

1 மில்லியன் டன் வரை ட்யூட்டி ஃப்ரீயாக (வரி இல்லாது) சர்க்கரையை இறக்குமத்தி செய்துகொள்ள அனுமதியளித்துள்ளது.

அதுமட்டுமல்லாது, தற்போது இருப்பில் உள்ள சர்க்கரை உள்நாட்டுத் தேவையை நிச்சயம் பூர்த்தி செய்யும். அக்டோபரில் கரும்பு அரவைப் பருவம் தொடங்கியதும் நிலைமை சீராகிவிடும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

எகிறும் சர்க்கரை விலை: எத்தனால் பெட்ரோல் தான் காரணமா? - சர்ச்சையும் பின்னணியும்
All We Imagine As Light: இளைப்பாறுதல் தேடும் மனிதிகள் பார்வதி, பிரபா, அனு | திரை தேவதைகள் 32

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in