

புதுடெல்லி: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி தொடர்பாக தமிழகம் உட்பட 16 மாநிலங்களில் சிபிஐ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். அப்போது சென்னை, கொல்கத்தாவை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக டிஜிட்டல் அரெஸ்ட் என்ற பெயரில் பொதுமக்களை மிரட்டி பணம் பறிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்த சூழலில் டிஜிட்டல் அரெஸ்ட் உட்பட 200 சைபர் குற்றங்களில் தொடர்புடைய ஒரு கும்பல் தொடர்பாக சிபிஐ தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
இது தொடர்பாக தமிழகம், பஞ்சாப், குஜராத், அசாம், மணிப்பூர், மேற்கு வங்கம், ராஜஸ்தான் உள்ளிட்ட 16 மாநிலங்களில் சிபிஐ அதிகாரிகள் நேற்று ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர். சுமார் 60-க்கும் மேற்பட்ட சிறப்பு குழுக்கள் 80-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனையை மேற்கொண்டனர்.
சென்னையில் ஒருவர் கைது:
இதுதொடர்பாக சிபிஐ வட்டாரங்கள் கூறியதாவது: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி கும்பல் உச்ச நீதிமன்ற இணைய தளம் போன்ற ஓர் இணையதளத்தை உருவாக்கி பல்வேறு சைபர் குற்றங்களில் ஈடுபட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கும்பல் அண்மை காலத்தில் மட்டும் பொது மக்களிடம் இருந்து ரூ.2 கோடியை மோசடி செய்திருக்கிறது.
இதைத் தொடர்ந்து நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் சோதனை நடத்தினோம். அப்போது சென்னை, கொல்கத்தாவை சேர்ந்த நரேஷ் மற்றும் சஞ்சிப் சாஹா ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். 80 இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் கணினி, லேப்டாப், மொபைல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஏராளமான வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன. நீதிமன்றங்கள், புலன்விசாரணை அமைப்புகள் பெயரில் தயாரிக்கப்பட்ட பல்வேறு போலி ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன.இவ்வாறு சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.