

திருவனந்தபுரம்: கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் குருவாயூர் தொகுதியில் போட்டியிடும் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான பி. கோபாலகிருஷ்ணன் மீது மத ரீதியாக வாக்கு சேகரித்ததாகத் தேர்தல் ஆணையம் வழக்குப் பதிவு செய்துள்ளது.
பாஜக மாநிலத் துணைத் தலைவரான கோபாலகிருஷ்ணன், தனது தேர்தல் பிரச்சாரத்தின்போது குருவாயூர் தொகுதியில் இந்து மதத்தைச் சேர்ந்த ஒருவரே சட்டபேரவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட வேண்டும் என்று பேசியதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. அதில் அவர், ‘‘சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஆன்மிகத் தலமான குருவாயூரில் கடந்த 50 ஆண்டுகளாக ஏன் ஒரு இந்து சட்டப்பேரவை உறுப்பினராக கூட தேர்ந்தெடுக்கப்படவில்லை? குருவாயூரின் புனித மண் மற்றும் அதன் அடையாளத்தை மீண்டும் மீட்டெடுக்க வேண்டும்” என்று பேசியிருந்தார்.
இதுகுறித்து மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி ரத்தன் யு. கேல்கர் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில், ‘மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப் பிரிவு 123 (3) மற்றும் தேர்தல் நடத்தை விதிகளின் கீழ் கோபாலகிருஷ்ணன் மீது வழக்குப் பதிவு செய்ய திருச்சூர் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சாதி அல்லது மத உணர்வுகளைத்தூண்டி வாக்கு சேகரிப்பதைத் தேர்தல் நடத்தை விதிகள் தடை செய்கின்றன.
மேலும், வழிபாட்டுத் தலங்களைப் பிரச்சார மேடையாகப் பயன்படுத்துவதும் விதிமீறலாகும். சர்ச்சைக்குரிய அந்த வீடியோ சமூக வலைதளங்களில் இருந்து அகற்றப்பட்டுள்ளதுடன், குருவாயூர் கோயில் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி, இப்பிரிவின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால், தேர்தல் ரத்து செய்யப்படலாம் அல்லது அவர் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.