

புதுடெல்லி: டெல்லியை அடுத்த குருகிராமில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் (பிஎச்இஎல்) நிறுவனத்தின் சூரிய மின்கல ஆலை உள்ளது.
இங்கு வெள்ளியை பயன்படுத்தி ஒளிமின்னழுத்த மின்கலங்கள் தயாரிக்கப்படுகிறது. பிஎச்இஎல் நிறுவனத்தின் அமார்பஸ் சிலிக்கான் சோலார் செல் ஆலையில் உள்ள பாதுகாப்புப் பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த 31.65 கிலோ வெள்ளி காணாமல் போனது 2024-ம் ஆண்டு நடைபெற்ற ஆய்வின்போது தெரிய வந்தது. காணாமல் போன வெள்ளியின் மதிப்பு சுமார் ரூ.71 லட்சம்.
இந்த விவகாரம் தொடர்பாக, கடந்த பிப். 26-ம் தேதி சிபிஐ நடத்திய ஆரம்பகட்ட விசாரணையில், ஆலையின் கூடுதல் பொது மேலாளரும் தலைவருமான டாக்டர் பாரத் குமார் பந்த் மற்றும் அப்போது மேலாளராக இருந்த ஆஷிஷ் குமார் ஆகியோர் குற்றம் புரிந்ததற்கான ஆதாரங்கள் இருப்பது தெரியவந்தது.
இதுதொடர்பாக, சிபிஐ துணை ஆய்வாளர் அளித்த புகாரின்பேரில், சிபிஐ ஜூலை 8-ம் தேதி எஃப்ஐஆர் பதிவு செய்தது. இதில், ஆலையின் கூடுதல் பொது மேலாளரும், தலைவருமான பந்த் மற்றும் தற்போது டெல்லியில் உள்ள பிஎச்இஎல் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் மேலாளராக பணியாற்றி வரும் ஆஷிஷ் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.