

புதுடெல்லி: குஜராத் மாநிலம் பரூச்சிலுள்ள மலையின் உச்சியில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஜாமியா மசூதி உள்ளது. இதை இந்திய தொல்லியல் துறை (ஏஎஸ்ஐ) பாதுகாத்து வருகிறது.
கடந்த 1909-ம் ஆண்டின் அரசிதழ் அறிவிப்பிலும் இது மசூதியாக பட்டியலிடப்பட்டுள்ளது. ஆனால், ஒரு சமண வழிபாட்டுத் தலமாக இருந்த இதை, டெல்லி சுல்தான்களின் மன்னர் கியாத் உல் தீன் துக்ளக் படையெடுப்பின்போது மசூதியாக மாற்றப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக குஜராத் உயர் நீதிமன்றத்தில் சமண மதத்தைச் சேர்ந்த 5 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர்.
அதில், ‘பரூச் நகரில் மசூதியாக இருக்கும் 14-ம் நூற்றாண்டைச் சேர்ந்த இக்கட்டிடத்தில் சமணர்களின் கோயில் இருந்தது. இது சமணர்களின் சகுனி விஹார் என்ற அமைப்பின், ‘அஸ்வபோத் தீர்த்தம்’ எனும் பெயரிலான கோயில் ஆகும். எனவே இதற்குள் ஆய்வு செய்ய உத்தரவிட வேண்டும்.
இதன் அடித்தளத்தில் 19-வது சமண தீர்த்தங்கரரான பகவான் மல்லிநாதரின் சிலையும் உள்ளது. இக்கோயிலை மீண்டும் நிலைநிறுத்தி, அந்தச் சிலையை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்’ எனக் கோரியுள்ளனர். இம்மனு நீதிபதி நிஷா தாக்கோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஹரிசங்கர் ஜெயின் ஆஜரானார்.
இவர், மசூதியின் கட்டிடத்தை சமண-இந்து வழிபாட்டுத் தலமாக மறுவகைப்படுத்த வேண்டும் என்றும், சமண சமூகத்தினர் அங்கு வழிபட அனுமதிக்க வேண்டும் என்றும் கோரினார். இவற்றுக்கு ஆதாரங்களாக வரலாற்று ஆவணங்கள் மற்றும் நூல்களைச் சுட்டிக்காட்டியுள்ளார். இவரது வாதத்தைக் கேட்ட நீதிபதி நிஷா தாக்கோர், ஆதாரங்களை ஆய்வு செய்து உரிய அறிவுறுத்தல் வழங்கும்படி தொல்லியல் துறைக்கு உத்தரவிட்டார்.