சாவர்க்கர் குறித்து சர்ச்சை பேச்சு: ராகுல் மீதான வழக்கு ரத்து

சாவர்க்கர் குறித்து சர்ச்சை பேச்சு: ராகுல் மீதான வழக்கு ரத்து
Updated on
1 min read

புதுடெல்லி: வி.டி.சாவர்க்கர் ஆங்கிலேயர்களிடம் மன்னிப்புக் கடிதம் எழுதி, ஓய்வூதியம் பெற்றுக் கொண்டு அவர்களின் சேவகராக செயல்பட்டதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கடந்த 2022-ம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் கடுமையாக விமர்சித்திருந்தார்.

ராகுல் காந்தியின் பேச்சை கண்டித்து உத்தர பிரதேசத்தை சேர்ந்த வழக்கறிஞர் நிருபேந்திர பாண்டே என்பவர் வழக்கு தொடர்ந்தார். அதை விசாரித்த லக்னோ மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றம், ராகுல் மீது வழக்குப் பதிவு செய்யவும், அவருக்கு சம்மன் அனுப்பவும் உத்தரவிட்டது. இதை எதிர்த்து, அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல் முறையீடு செய்தார். ஆனால், அந்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதையடுத்து, தன் மீதான கிரிமினல் அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரி, உச்ச நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இவ்வழக்குக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்ட நிலையில், உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் திபான்கர் தத்தா மற்றும் ஷீல் நாகு அடங்கிய அமர்வு முன்பு மீண்டும் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘‘இந்த விவகாரத்தில் நடவடிக்கைகளை தொடர, மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளதா?’’ என்று கேட்டனர்.

அதற்கு, உத்தர பிரதேச அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் நடராஜ், ‘‘இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க அரசு அனுமதி வழங்கவில்லை’’ என்று பதிலளித்தார்.

இதையடுத்து நீதிபதிகள், ராகுல் காந்தி மீது குற்றவியல் நடவடிக்கைகளைத் தொடர சட்டப்படி தேவைப்படும் அனுமதி பெறப்படவில்லை என்பதைக் கருத்தில் கொண்டு, அவதூறு பேச்சு தொடர்பான வழக்கையும், சம்மனையும் ரத்து செய்வதாக உத்தரவிட்டனர்.

சாவர்க்கர் குறித்து சர்ச்சை பேச்சு: ராகுல் மீதான வழக்கு ரத்து
80-வது சுதந்திர தினம் கொண்டாட்டம்: டெல்லி செங்கோட்டையில் 1,000 ஏஐ கேமராக்களுடன் பலத்த பாதுகாப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in