

புதுடெல்லி: நாட்டின் 80-வது சுதந்திர தின கொண்டாட்டத்தையொட்டி வரலாற்றுச் சிறப்புமிக்க டெல்லி செங்கோட்டையில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்துடன் கூடிய 1,000-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
டெல்லி செங்கோட்டையில் இன்று நடைபெறுகிற சுதந்திர தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடி தேசிய கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்.
இந்நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து டெல்லி வடக்குப்பகுதி துணை காவல் ஆணையர் ராஜா பாந்தியா நேற்று தெரிவித்ததாவது:
கடந்த கால நிகழ்வுகளை கருத்தில் கொண்டு, இந்த ஆண்டு செங்கோட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தீவிரவாத எதிர்ப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கான பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விழாவில் பங்கேற்கும் பொதுமக்களுக்கு எவ்வித அசவுகரியமும் ஏற்படாத வகையில் இந்த ஏற்பாடுகள் திட்டமிடப்பட்டுள்ளன.
செங்கோட்டையின் உள்பகுதி மற்றும் வெளிப்பகுதிகளில் 1,000-க்கும் மேற்பட்ட அதிநவீன சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவை அனைத்தும் ஏஐ சார்ந்த ‘வீடியோ அனாலிடிக்ஸ்’ தொழில்நுட்பத்துடன் இணைக்கப்பட்டு, இதற்காக அமைக்கப்பட்ட கட்டுப்பாட்டு அறையிலிருந்து 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
சந்தேகத்திற்குரிய நபர்களின் நடமாட்டம், தேவையற்ற கூட்ட நெரிசல் அல்லது சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள் ஏதேனும் ஏற்பட்டால், உடனடி நடவடிக்கை எடுக்கும் வகையில் சிறப்புப் படைகள் முக்கிய இடங்களில் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன.
அனைத்து பாதுகாப்பு முகமைகளுடனும் இணைந்து மாதிரி பயிற்சிகள் மற்றும் கலந்தாய்வுகள் நடத்தப்பட்டு, அவசர காலங்களை எதிர்கொள்ளும் வகையில் ஒருங்கிணைந்த திட்டமிடல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு பாந்தியா தெரிவித்தார்.