

ஜெய்ப்பூர்: டேட்டிங் செயலி மூலம் தனக்கு அறிமுகமான 31 வயது இளைஞரை திருமணம் செய்வதற்காக ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர்கள் பயணம் செய்து ராஜஸ்தானுக்கு வந்துள்ளார் கனடா பெண்.
இதுகுறித்து ராஜஸ்தான் மாநிலம் நீம்ரானா காவல் நிலைய அதிகாரி சுரேந்திர யாதவ் கூறியதாவது: கனடாவைச் சேர்ந்த ஒரு பெண்ணும் ஹரியானாவின் பானிபட்டைச் சேர்ந்த நிதினும் (31) ஒரு வருடத்துக்கு முன்பு டேட்டிங் செயலி மூலம் முதன்முதலில் இணைந்துள்ளனர். இருவரும் திருமணம் செய்து கொள்ள ஒப்புக்கொண்டனர்.
இதன்படி அந்தப் பெண் சுற்றுலா விசாவில் கடந்த நவம்பர் 11-ம் தேதி டெல்லி வந்துள்ளார். அந்தப் பெண்ணை நிதின், நீம்ரானாவுக்கு அழைத்து வந்து தங்க வைத்துள்ளார். திருமணம் பற்றிய பேச்சு நடந்தபோது, கனடா பெண்ணின் வயது 61 என தெரியவந்ததால் அந்தப் பெண்ணை திருமணம் செய்துகொள்ள நிதின் மறுத்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, அந்தப் பெண் கனடா தூதரகத்தைத் தொடர்பு கொண்டு புகார் தெரிவித்துள்ளார். காவல் துறையினர் நிதினை விசாரணைக்காக காவலில் எடுத்துள்ளனர். கனடா பெண் கோட்புட்லியில் தங்க வைக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது. விசாரணையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.