வினாத்தாள் கசிவு முறைகேடு குற்றவாளிகளுக்கு 10 ஆண்டு சிறை, ரூ.10 கோடி அபராதம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

நாடாளு​மன்​றத்​தில் 27-ம் தேதி தாக்கல் செய்ய திட்டம்
அமைச்சரவை முடிவுகள் குறித்து  பேசும் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்.

அமைச்சரவை முடிவுகள் குறித்து பேசும் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்.

Updated on
2 min read

புதுடெல்லி: பிரதமர் மோடி தலை​மை​யில் நடை​பெற்ற மத்​திய அமைச்​சர​வைக் கூட்​டத்​தில் வினாத்​தாள் கசிவு தடுப்பு மசோ​தாவுக்கு ஒப்​புதல் அளிக்​கப்​பட்​டது. இந்த புதிய மசோ​தா​வின்​படி வினாத்​தாள் கசிவு முறை​கேட்​டில் ஈடு​படும் குற்​ற​வாளி​களுக்கு அதி​கபட்​சம் 10 ஆண்டு சிறை தண்​டனை​யும், ரூ.10 கோடி அபராத​மும் விதிக்​கப்​படும்.

நீட் வினாத்​தாள் கசிவு விவ​காரம் தொடர்​பாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மாணவர்கள், இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த சூழலில், டெல்​லி​யில் பிரதமர் மோடி தலை​மை​யில் மத்​திய அமைச்​சர​வைக் கூட்​டம் நேற்று நடை​பெற்​றது. இதில், வினாத்​தாள் கசிவு தடுப்பு மசோ​தாவுக்கு ஒப்​புதல் அளிக்​கப்​பட்​டது. நாடாளு​மன்​றத்​தில் இந்த புதிய மசோதா 27-ம் தேதி (திங்​கள்​கிழமை) தாக்​கல் செய்​யப்​படும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

மத்திய அமைச்சரவை முடிவுகள் குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், புதிய மசோதா குறித்து தெரிவிக்க மறுத்துவிட்டார். புதிய மசோதா குறித்து மத்​திய அரசு வட்​டாரங்​கள் கூறிய​தாவது: வினாத்​தாள் கசிவு தொடர்​பான வழக்​கு​களை விசா​ரிக்க விரைவு நீதி​மன்​றங்​களை அமைக்க நடவடிக்கை எடுக்​கப்​பட்டு வரு​கிறது.

முதல்​கட்​ட​மாக, டெல்லி உயர் நீதி​மன்​றம் சார்​பில் விரைவு நீதி​மன்​றம் அமைக்​கப்​பட்​டுள்​ளது. மும்பை உயர் நீதி​மன்​றம் சார்​பில் 2 விரைவுநீதி​மன்​றங்​கள் அமைக்​கப்​பட்​டுள்​ளன. இது​போல அனைத்து மாநிலங்​களி​லும் விரைவு நீதி​மன்​றங்​கள் அமைக்​கப்படும். இங்கு 3 முதல் 6 மாதங்​களில் தீர்ப்பு வழங்​கப்​படும்.

தற்​போது வினாத்​தாள் கசிவு தொடர்​பான வழக்​கு​கள், பொதுத் தேர்​வு​கள் (முறை​கேடு​களை தடுத்​தல்) சட்​டம் 2024-ன் கீழ் விசா​ரிக்​கப்​படு​கின்​றன. இதில் முக்கிய திருத்​தங்​கள் செய்து, புதிய மசோதா வரையறுக்​கப்​பட்​டுள்​ளது. அதன்​படி வினாத்​தாள் கசி​வு குற்​ற​வாளி​களுக்கு குறைந்​த​பட்​சம் 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்​கப்​படும்.

குழு​வாக, கும்​பலாக முறை​கேட்​டில் ஈடு​படுவோருக்கு 10 ஆண்டு வரை சிறை தண்​டனை​யும், ரூ.10 கோடி வரை அபராத​மும் விதிக்​கப்​படும். வினாத்​தாள் கசி​வில் தொடர்​பு உடைய கல்வி நிறு​வனங்​களின் உரிமம் ரத்து செய்​யப்​பட்​டு, சீல் வைக்​கப்படும். நீட், ஜேஇஇ, கியூட் உள்​ளிட்ட நுழைவுத்தேர்​வு​கள், யுபிஎஸ்​சி, எஸ்​எஸ்சி போட்​டித் தேர்​வு​கள் தொடர்​பான வி​னாத்​தாள் கசிவு விவ​காரங்​கள் புதி​ய மசோ​தா​வின்​ கீழ்​ வி​சா​ரிக்​கப்​படும்​. இவ்​வாறு மத்​தி​ய அரசு வட்​டாரங்​கள்​ தெரிவித்​தன.

இதற்கிடையே, அமைச்சரவைக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ‘‘இளைஞர்கள் அதிக நேரம் இருப்பது இன்ஸ்டாகிராமில்தான். எனவே, அரசின் திட்டங்களையும் அதன் வாயிலாகவே இளைஞர்களிடம் கொண்டு செல்ல வேண்டும். மத்திய அரசின் செயல்பாடுகளை ‘ரீல்ஸ்’ ஆக தயாரித்து பதிவிடவேண்டும்’’ என்று அமைச்சர்களுக்கு அறிவுறுத்தினார். முன்னதாக, விரைவு நீதிமன்றம் அமைக்கப்படும் என மோடி இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்ட நிலையில், ஒரே நாளில் அவரது கணக்கில் 10 லட்சம் புதிய ஃபாலோயர்கள் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

செல்பி வீடியோ வெளியிட்ட பிரதமர்: சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி 23-ம் தேதி நள்ளிரவு 11.52 மணிக்கு ஒரு செல்ஃபி வீடியோ வெளியிட்டார். அதில் அவர் கூறியதாவது: வினாத்தாள் கசிவு சாதாரண விஷயம் அல்ல. இது லட்சக்கணக்கான மாணவர்கள், பெற்றோருக்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்தி உள்ளது. இதன்காரணமாக கடந்த இரண்டரை மாதங்களாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். வினாத்தாள் கசிவால் மாணவர்களின் ஓராண்டு படிப்பு பாதிக்கப்படக்கூடாது என்பதில் மத்திய அரசு உறுதியாக இருந்தது. மிக குறுகிய காலத்தில் சுமார் 22 லட்சம் மாணவ, மாணவிகளுக்காக நீட் மறுதேர்வு நடத்தப்பட்டது. கடந்த 19-ம் தேதி மறுதேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. வினாத்தாள் கசிவு வழக்குகளை விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள் அமைக்க உத்தரவிட்டுள்ளேன். நாடாளுமன்றத்தில் புதிய மசோதாவும் விரைவில் நிறைவேற்றப்படும்.

<div class="paragraphs"><p>அமைச்சரவை முடிவுகள் குறித்து  பேசும் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்.</p></div>
“போராட்டம் குறித்த என் கருத்தை ஊடகங்கள் தவறாக சித்தரித்துவிட்டன” - உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி விளக்கம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in