

புதுடெல்லி: அனைத்து மாநிலங்களிலும் சரிசமமாக 50 சதவீதம் அளவுக்கு மக்களவைத் தொகுதிகளை அதிகரிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பாஜக அரசின் இந்த முடிவால் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவு பெருகிவருகிறது.
மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதற்காக அரசியல் சாசன திருத்தம் (131-வது திருத்தம்) மசோதா 2026, தொகுதி மறுவரையறை மசோதா 2026, யூனியன் பிரதேச சட்டங்கள் (திருத்தம்) மசோதா 2026 ஆகிய 3 மசோதாக்கள் கடந்த ஏப்ரலில் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மசோதாக்கள் மூலம் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை 543-ல் இருந்து 850 ஆக உயர்த்த திட்டமிடப்பட்டு இருந்தது. அரசியலமைப்பு சட்டத் திருத்த மசோதாக்கள் என்பதால் இவற்றை நிறைவேற்ற மூன்றில் இரண்டு பங்கு எம்பிக்களின் ஆதரவு தேவை. ஆனால் போதிய ஆதரவு கிடைக்காததால் மசோதாக்களை நிறைவேற்ற முடியவில்லை.
சிறப்பு கூட்டத் தொடர்
இந்த சூழலில் நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டத் தொடர் நவம்பர் 30-ம் தேதி தொடங்கி டிசம்பர் 3-ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் மகளிர் இடஒதுக்கீடு அமலாக்கம் மற்றும் மக்களவை தொகுதி மறுவரையறை தொடர்பான மசோதாக்கள் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதை உறுதி செய்யும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் அனைத்து மாநிலங்களுக்கும் சரிசமமாக 50 சதவீதம் அளவுக்கு மக்களவைத் தொகுதிகளை அதிகரிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த முடிவால் பாஜக அரசுக்கு ஆதரவு அதிகரித்துள்ளது.
தொகுதி மறுவரையறை ஆணையம்
இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது: கடந்த 1971-ம் ஆண்டு மக்கள் தொகையின் அடிப்படையில் நாடாளுமன்ற மக்களவையில் தற்போது 543 இடங்கள் உள்ளன. இதைத் தொடர்ந்து 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 850 ஆக அதிகரிக்க திட்டமிடப்பட்டு இருந்தது. இதற்கு தென் மாநிலங்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்தன.
அனைத்து தென்மாநிலங்களிலும் மக்கள் தொகை கட்டுப்படுத்தப்பட்டு உள்ளன. எனவே மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரித்தால் தென்மாநிலங்கள் பாதிக்கப்படும் என்று சுட்டிக் காட்டப்பட்டது. இதற்கு கடந்த ஏப்ரல் மாத நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரிலேயே மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெளிவான விளக்கம் அளித்தார். அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே மாதிரியாக 50 சதவீத இடங்கள் அதிகரிக்கப்படும் என்று அவர் உறுதி அளித்தார்.
இதன் அடிப்படையில் தற்போது மசோதாவில் திருத்தம் செய்யப்பட்டு அனைத்து மாநிலங்களிலும் 50 சதவீதம் என்ற வகையில் மக்களவைத் தொகுதிகளை அதிகரிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 815 ஆக அதிகரிக்கும். இதில் 33 சதவீத இடங்கள் மகளிருக்கு ஒதுக்கீடு செய்யப்படும். வரும் 2051-ம் ஆண்டு வரை மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையில் மாற்றம் செய்யப்படாது.
நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்ட பிறகு தொகுதி மறுவரையறை ஆணையம் அமைக்கப்படும். இந்த ஆணையம் நாடு முழுவதும் மக்களவை தொகுதிகளை மறுவரையறை செய்யும். வரும் 2029-ம் ஆண்டில் 815 மக்களவைத் தொகுதிகளுக்கும் பொதுத்தேர்தல் நடைபெறும். இவ்வாறு மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.