

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் இரண்டு சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் இன்று (அக்.6) வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்நிலையில், வாக்குப்பதிவு நடைபெறும் ரெஜினகர் தொகுதியில் ஆம் ஜனதா உன்னாயன் கட்சி (ஏஜேயுபி) தலைவர் ஹுமாயூன் கபீர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ரெஜினகர் தொகுதியில் ஹுமாயூன் கபீரின் மகன் குலாம் நபி ஆசாத் போட்டியிடுகிறார். இந்நிலையில், இன்று காலை ஏஜேயுபி கட்சி அலுவலகத்துக்கு ஹுமாயூன் கபீர் வந்திருந்தார். அப்போது அங்கு பணியில் இருந்த போலீஸாருக்கும், அவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. அதையடுத்து அவரை போலீஸார் கைது செய்து, ரெஜினகர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
கடந்த ஏப்ரல் மாதம் மேற்கு வங்க மாநில சட்டப்பேரவை தேர்தலில் முர்ஷிதாபாத் மாவட்டம் நவோடா தொகுதியில் ஹுமாயூன் கபீர் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அப்போது ஆட்சிப் பொறுப்பில் இருந்த திரிணமூல் காங்கிரஸ் கட்சி மீது குற்றச்சாட்டுகளை அவர் வைத்திருந்தார்.
இந்தச் சூழலில் இன்று இடைத்தேர்தலை முன்னிட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், ரெஜினகர் தொகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள போலீஸார் குறித்து பல்வேறு கருத்துகளை அவர் தெரிவித்து வந்தார். அவரது வீடு, கட்சி அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளால் போலீஸார் பணியில் ஈடுபட்டனர். இந்த சூழலில் குடும்பத்துடன் அவர் வாக்கு செலுத்திய நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேற்கு வங்கத்தில் ரெஜினகர், நந்திகிராம் தொகுதிகளிலும், புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி, தமிழகத்தில் மதுராந்தகம், தாராபுரம் சட்டப்பேரவை தொகுதியிலும், அசாம் மாநிலத்தில் மக்களவை தொகுதி ஒன்றிலும் இன்று இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதை முன்னிட்டு அந்தந்த தொகுதிகளைச் சார்ந்த வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.