

புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் அமைந்துள்ள தேர்தல் ஆணைய தலைமையகம் நோக்கி இன்று (அக்.6) இண்டியா கூட்டணி கட்சியின் தலைவர்கள் மற்றும் எம்.பி-க்கள் பேரணி மேற்கொள்ளவுள்ள நிலையில் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணைய தலைமையகத்துக்கு வெளியே இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், பாதுகாப்பு கருதி அங்கு போலீஸார் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தேர்தல் ஆணைய தலைமையகத்துக்கு வெளியே தங்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தேர்தல் ஆணையத்தை கருவியாகப் பயன்படுத்தி ஜனநாயகத்துக்கு எதிராகச் செயல்படும் பிரதமர் மோடி, அமைச்சர் அமித் ஷா கூட்டணியை கண்டிப்பதோடு, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரை உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிறது இண்டியா கூட்டணி.
தேர்தல் ஆணைய விவகாரம் குறித்து கடந்த 30-ம் தேதி இண்டியா கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இதில் பல்வேறு போராட்டங்களை முன்னெடுப்பது என்று தீர்மானிக்கப்பட்டது. அதன்படி இன்று (அக்.6) தேர்தல் ஆணைய தலைமையகம் நோக்கி இண்டியா கூட்டணியினர் பேரணி செல்கின்றனர். நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து இந்த பேரணி தொடர்கிறது. இதில் பல்வேறு கட்சிகளின் முக்கிய தலைவர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் ஆம் ஆத்மி பங்கேற்கவில்லை. அதே நேரத்தில் இந்த பேரணிக்கு பிஜு ஜனதா தளம் ஆதரவு தெரிவித்துள்ளது. அந்த கட்சியின் எம்.பி-க்கள் இந்த பேரணியில் பங்கேற்க உள்ளதாக இன்று அறிவிக்கப்பட்டது. 11 மணி அளவில் தொடங்கும் இந்த பேரணி அமைதியான முறையில் நடைபெறும் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
டெல்லியில் பலத்த பாதுகாப்பு
இண்டியா கூட்டணியினர் பேரணி அறிவித்துள்ள நிலையில் தேர்தல் ஆணைய தலைமயகம் மட்டுமல்லது விஜய் சவுக், ஆகாசவாணி பவன் மற்றும் டெல்லியின் மத்திய பகுதியில் போலீஸார் உடன் அதிரடி விரைவுப் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சட்டம் ஒழுங்கை காக்கும் வகையில் அவர்கள் பணியில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஏற்கெனவே, கடந்த சில நாட்களாக பல்வேறு எதிர்க்கட்சிகள் மற்றும் மாணவர், இளைஞர் அமைப்புகள் டெல்லி ஜந்தர் மந்தர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தலைமை தேர்தல் ஆணையர் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை தடுத்து கைது செய்து வருகிறது டெல்லி போலீஸ். இந்தச் சூழலில் இண்டியா கூட்டணியின் பேரணி இன்று கவனம் பெற்றுள்ளது.