

கோப்புப் படம்
புதுடெல்லி: இந்த ஆண்டில் முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஜனவரி 28-ம் தேதி தொடங்குகிறது. இதுகுறித்து மத்திய அரசு அதிகாரிகள் நேற்று கூறியதாவது: நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் தேதிகள் குறித்து இறுதி முடிவெடுத்துள்ளது. ஜனவரி 28-ம் தேதி முதல் நாள் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றுகிறார். அடுத்த நாள் 29-ம் தேதி பாதுகாப்புப் படையினர் பாசறைக்குத் திரும்பும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
(குடியரசு தினம் 26-ம் தேதி நடைபெறுகிறது. அன்று பாதுகாப்புப் படையினரின் அணிவகுப்புகள் நடைபெறும். அதன்பின், 29-ம் தேதி குடியரசு தின விழா நிறைவை குறிக்கும் வகையில் பாதுகாப்புப் படையினர் பாசறை திரும்பும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.) அதனால் அன்றைய தினம் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறாது.
ஜனவரி 30-ம் தேதி பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படும். ஜன.31-ம் தேதி நாடாளுமன்ற மக்களவை, மாநிலங்களவை அலுவல்கள் நடைபெறாது. பிப்ரவரி 1-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 9-வது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
பின்னர் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம், பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறும். பிப்ரவரி 13-ம் தேதி கூட்டத்தொடர் ஒரு மாத விடுமுறைக்கு ஒத்திவைக்கப்படும்.
மார்ச் 9-ம் தேதி மீண்டும் கூட்டத் தொடர் தொடங்கி, ஏப்ரல் 2-ம் தேதி வியாழக்கிழமை நிறைவு பெறும். வழக்கமாக நாடாளுமன்ற கூட்டத்தொடர் வெள்ளிக்கிழமை ஒத்திவைக்கப்படும். இந்த ஆண்டு ஏப்ரல் 3-ம் தேதி புனித வெள்ளி வருவதால், ஒரு நாள் முன்னதாக கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்படுகிறது.
முதல் கட்ட நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடிந்து ஒரு மாத விடுமுறையின் போது, பல்வேறு துறைகளின் நிலைக் குழுக்கள், கோரிக்கைகள், மானியங்கள் தொடர்பாக ஆய்வு செய்ய உதவியாக இருக்கும். இவ்வாறு மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.