எங்கள் கட்சியின் தேர்தல் உத்திகளை திருடவே ஐ-பேக் அலுவலகத்தில் அமலாக்கத் துறை சோதனை: மம்தா

எங்கள் கட்சியின் தேர்தல் உத்திகளை திருடவே ஐ-பேக் அலுவலகத்தில் அமலாக்கத் துறை சோதனை: மம்தா
Updated on
2 min read

கொல்கத்தா: திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் உத்திகளை திருடும் நோக்கில் ஐ-பேக் நிறுவனத்தில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியதாக, அக்கட்சியின் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.

திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் வியூகங்களை வகுத்தளிக்கும் ஐ-பேக் நிறுவனத்தின் கொல்​கத்​தா​ அலுவல​கம், கொல்கத்தாவில் உள்ள அதன் இயக்​குநர் வீடு உட்பட 10 இடங்​களில் அமலாக்​கத் துறை அதி​காரி​கள் நேற்று சோதனை நடத்​தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியின் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி தலைமையில் கொல்கத்தாவில் மிகப் பெரிய பேரணி நடத்தப்பட்டது.

பேரணியின் முடிவில் உரையாற்றிய மம்தா பானர்ஜி, ‘‘ஐ-பேக் நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை நேற்று நடத்திய சோதனையின் நோக்கம், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தரவுகளையும் அதன் தேர்தல் உத்திகளையும் திருடும் நோக்கம் கொண்டது. இதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

பாஜகவின் அரசியல் கருவியாக அமலாக்கத் துறை செயல்படுகிறது. அமலாக்கத் துறை சோதனை நடைபெற்ற இடத்துக்கு நான் கட்சியின் தலைவராகவே சென்றேன். மாநில முதல்வராக அல்ல. சட்டவிரோதமாக நான் எதையும் செய்யவில்லை.

அமலாக்கத் துறையின் நடவடிக்கையைக் கண்டித்து டெல்லியில் உள்ள அமித் ஷாவின் அலுவலகம் முன்பாக இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திரிணமூல் காங்கிரஸ் (டிஎம்சி) கட்சியின் எம்பிக்கள் நடத்தப்பட்ட விதம், வெட்கக்கேடானது; ஏற்றுக்கொள்ள முடியாதது.

ஜனநாயக முறைப்படி போராட்டத்தில் ஈடுபட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளை, தெருக்களில் இழுத்துச் சென்றது டெல்லி போலீஸ் அல்ல; அது சீருடைக்குள் உள்ள ஆணவம். இந்த நாட்டின் ஜனநாயகம் பாஜகவின் தனிப்பட்ட சொத்து அல்ல.

அதிகாரத்தில் இருப்பவர்களின் வசதிக்காக செயல்படுவதல்ல ஜனநாயகம். பாஜக தலைவர்கள் போராட்டம் நடத்தும்போது அவர்கள் சிவப்பு கம்பள வரவேற்பையும், சிறப்புச் சலுகைகளையும் எதிர்பார்க்கிறார்கள். ஆனால், எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டம் நடத்தினால் அவர்களை இழுத்துச் செல்கிறார்கள். இந்த இரட்டை நிலைப்பாடு பாஜகவின் ஜனநாயகம் எப்படிப்பட்டது என்பதை அம்பலப்படுத்துகிறது.

மரியாதை என்பது பரஸ்பரமானது. நீங்கள் எங்களை மதித்தால், நாங்கள் உங்களை மதிப்போம். நீங்கள் எங்களை தெருவில் இழுத்துச் சென்றால், நாங்களும் உங்களை இழுத்துச் செல்வோம். இது நம் எல்லோருக்குமான நாடு. கண்ணியத்துக்கு யார் தகுதியானவர்கள் என்பதை உள்துறை அமைச்சர் தீர்மானிக்க முடியாது.

தேர்தல் ஆணையத்தின் உதவியுடன் மகாராஷ்டிர தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது. மேற்கு வங்கத்திலும் அதையே அவர்கள் செய்ய விரும்புகிறார்கள். டெல்லியில் உள்ள பாஜக மூத்த தலைவர்கள், நிலக்கரி ஊழல் பணத்தைப் பெறுகிறார்கள். தேவைப்பட்டால் பொதுமக்கள் முன்னிலையில் அதற்கான ஆதாரங்களை என்னால் சமர்ப்பிக்க முடியும்.

நாங்கள் 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவோம். மத்தியில் உள்ள பாஜக அரசு 2029 வரை நீடிக்காது. மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் வெற்றி பெற்ற பிறகு, டெல்லியிலும் நாம் வெற்றி பெற வேண்டும். பாஜக இந்தியாவை ஆள அனுமதிக்க முடியாது’’ என்று மம்தா பானர்ஜி பேசினார்.

பின்னணி என்ன? - மேற்கு வங்க மாநிலத்​தில் ஈஸ்​டர்ன் கோல்​பீல்ட்ஸ் நிறுவனத்துக்கு சொந்​த​மான சுரங்​கத்​தில் இருந்து சட்டவிரோதமாக நிலக்​கரி தோண்டி எடுக்கப்பட்டதாக புகார் எழுந்​தது. இது தொடர்​பாக 2020-ம் ஆண்டு சிபிஐ வழக்கு பதிவு செய்து விசா​ரணை நடத்தி வரு​கிறது. இந்த வழக்​கின் அடிப்படையில், அமலாக்​கத் துறை தனி​யாக வழக்கு பதிவு செய்து விசா​ரித்து வருகிறது.

குறிப்​பாக இந்த முறை​கேட்​டில் பயனடைந்​த​தாக சந்தேகிக்​கப்​படு​பவரும் மேற்கு வங்க முதல்​வர் மம்தா பானர்​ஜி​யின் உறவினரு​மான திரிண​மூல் காங்​கிரஸ் பொதுச் செய​லா​ளர் அபிஷேக் பானர்ஜி உள்​ளிட்​டோரிடம் அமலாக்​கத் துறை அதிகாரிகள் விசா​ரணை நடத்தி உள்ளனர்.

இந்தச் சூழலில், கொல்​கத்​தா​வின் சால்ட்​லேக் பகு​தி​யில் உள்ள, அரசி​யல் ஆலோ​சனை வழங்​கும் ஐ-பேக் நிறுவன அலு​வல​கம் மற்றும் அதன் இயக்​குநர் பிர​திக் ஜெயின் வீடு மற்​றும் டெல்​லி​யில் உள்ள 4 இடங்​கள் உட்பட மொத்​தம் 10 இடங்​களில் அமலாக்கத் துறை அதி​காரி​கள் நேற்று காலை 7 மணி முதல் சோதனை நடத்தினர்.

சோதனை நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, பிரதிக் ஜெயினின் வீட்டுக்கு போலீஸாருடன் சென்ற மம்தா பானர்ஜி, முக்கிய ஆவணங்களை அமலாக்கத் துறையினரிடம் இருந்து கைப்பற்றினார். பின்னர் வீட்டுக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘‘அமலாக்கத் துறையினரின் இந்த சோதனை நடவடிக்கை அரசியல் உள்நோக்கம் கொண்டது; அரசியலமைப்புக்கு எதிரானது.

அவர்கள் எங்கள் கட்சியின் ஆவணங்களையும் சட்டமன்றத் தேர்தலுக்கான எங்கள் வேட்பாளர்களைப் பற்றிய விவரங்களையும் கொண்ட ஹார்ட் டிஸ்குகளை பறிமுதல் செய்து கொண்டிருந்தனர். நான் அவற்றை அவர்களிடம் இருந்து மீட்டுக் கொண்டு வந்தேன். அரசியல் கட்சியின் தரவுகளைச் சேகரிப்பது அமலாக்கத் துறையின் கடமையா?. இதற்கும், நிதி முறைகேடு தொடர்பான விசாரணைக்கும் எந்த தொடர்பும் இல்லை. இது ஒரு பழிவாங்கும் நடவடிக்கை. உள்துறை அமைச்சர் நாட்டை பாதுகாப்பவரைப் போல அல்லாமல், மிகவும் மோசமான அமைச்சரைப் போல நடந்து கொள்கிறார்’’ என குற்றம் சாட்டினார்.

மம்தா மீது புகார்: இதுகுறித்து அமலாக்​கத் துறை வெளி​யிட்ட அறிக்​கை​யில், “பிரதீக் ஜெயின் வீட்​டில் சோதனை நடத்​தி​ய​போது, அங்கு தனது உதவி​யாளர்​களு​டன் வந்த முதல்​வர் மம்தா பானர்​ஜி, சில ஆவணங்​கள் மற்​றும் மின்​னணு சாதனங்​களை எடுத்​துச் சென்​றார். இது​போல, சால்ட்​லேக் பகு​தி​யில் உள்ள ஐ-பேக் அலு​வல​கத்​துக்கு தனது உதவி​யாளர்​களு​டன் வந்த மம்​தா, அங்​கிருந்த சில ஆவணங்​கள் மற்​றும் மின்​னணு ஆதா​ரங்​களை எடுத்​துச் சென்றார்” என கூறப்​பட்​டுள்​ளது.

கடந்த 2021-ம் ஆண்டு நடை​பெற்ற சட்​டப்​பேர​வைத் தேர்தலில் திரிண​மூல் கட்​சிக்கு ஐ-பேக் நிறு​வனம் வியூ​கம் அமைத்​துக் கொடுத்​தது. அத்​துடன் கட்​சி​யின் தகவல் தொழில்​நுட்ப மற்​றும் ஊடக செயல்​பாடு​களை கவனித்​து வரு​கிறது என்​பது குறிப்பிடத்தக்​கது.

எங்கள் கட்சியின் தேர்தல் உத்திகளை திருடவே ஐ-பேக் அலுவலகத்தில் அமலாக்கத் துறை சோதனை: மம்தா
ஜன.28-ல் கூடுகிறது நாடாளுமன்ற கூட்டத் தொடர்; பிப்.1-ல் பட்ஜெட் தாக்கல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in