மேற்கு வங்க மறு வாக்குப்பதிவு: 11 மணிவரை மக்ரஹத் பச்சிமில் 38.2%, டைமண்ட் ஹார்பரில் 35.92 % வாக்குப்பதிவு

மேற்கு வங்க மறு வாக்குப்பதிவு: 11 மணிவரை மக்ரஹத் பச்சிமில் 38.2%, டைமண்ட் ஹார்பரில் 35.92 % வாக்குப்பதிவு
Updated on
1 min read

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் 15 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், இன்று காலை 11 மணி நிலவரப்படி, மக்ரஹத் பச்சிம் சட்டமன்றத் தொகுதியில் 38.2 சதவீதமும், டைமண்ட் ஹார்பர் தொகுதியில் 35.92 சதவீதமும் வாக்குப்பதிவு நடந்துள்ளது.

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் ஏப்ரல் 29 அன்று நடைபெற்ற இரண்டாம் கட்ட வாக்குப்பதிவின்போது, ​​142 தொகுதிகளில் 92.67 சதவீதம் வாக்குப்பதிவு நடந்திருந்தது. அப்போது, தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி, தேர்தல் ஆணையம் மறுவாக்குப்பதிவுக்கு உத்தரவிட்டதைத் தொடர்ந்து, தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில், மக்ரஹத் பச்சிம் சட்டமன்றத் தொகுதியில் உள்ள 11 வாக்குச்சாவடிகளிலும், டைமண்ட் ஹார்பர் தொகுதியில் உள்ள 4 வாக்குச்சாவடிகளிலும், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் இன்று மறுவாக்குப்பதிவு தொடங்கியது.

மறு வாக்குப்பதிவின்போது எவ்வித இடையூறுகளும் ஏற்படாமல் தடுக்கும் வகையில், வாக்குச்சாவடிகளுக்கு அருகே விரைவு அதிரடிப் படை (RAF) வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இரண்டாம் கட்ட தேர்தலின்போது, ​​டயமண்ட் ஹார்பர் தொகுதியின் ஃபால்டா பகுதியில் உள்ள பல வாக்குச்சாவடிகளில், வாக்காளர்கள் வாக்களிப்பது தடுக்கப்பட்டதாக பாஜகவின் மேற்கு வங்க இணைப் பொறுப்பாளர் அமித் மால்வியா குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து, இன்று மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது.

டயமண்ட் ஹார்பர் தொகுதியில், திரிணமூல் காங்கிரஸின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் பன்னா லால் ஹால்டரை எதிர்த்து, பாஜக தனது வேட்பாளராக தீபக் குமார் ஹால்டரை நிறுத்தியுள்ளது. கடந்த தேர்தலில் பாஜக வேட்பாளரை பன்னா லால் ஹால்டர் 16,996 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்திருந்த நிலையில், தற்போது இவ்விருவரும் மீண்டும் ஒரு நேரடிப் போட்டியைச் சந்திக்கின்றனர்.

மக்ரஹத் பச்சிம் தொகுதியில், திரிணமூல் காங்கிரஸின் சமீம் அகமது மொல்லா, பாஜகவின் கௌர்சுந்தர் கோஷை எதிர்த்துப் போட்டியிடுகிறார். 2011-ஆம் ஆண்டு இத்தொகுதி உருவாக்கப்பட்டதிலிருந்து, திரிணாமூல் காங்கிரஸே இத்தொகுதியைத் தன் வசம் வைத்துள்ளது.

மேற்கு வங்க மறு வாக்குப்பதிவு: 11 மணிவரை மக்ரஹத் பச்சிமில் 38.2%, டைமண்ட் ஹார்பரில் 35.92 % வாக்குப்பதிவு
“கருத்துக்கணிப்புகள் தொலைக்காட்சி விவாதங்களுக்கு மட்டுமே” - கவுரவ் கோகோய் கடும் தாக்கு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in