

புதுடெல்லி: 2026 பிரிக்ஸ் மாநாடு இந்தியாவின் தலைமையில் நடந்து முடிந்துள்ளது. “மீள்திறன், புதுமை, ஒத்துழைப்பு மற்றும் நிலைத்தன்மை” ஆகிய 4 தூண்களின் வழியில் எங்களது முயற்சிகளை ஒருங்கிணைத்துள்ளோம் என்று பிரிக்ஸ் மாநாட்டின் நிறைவு நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிரதமர் மோடி தெரிவித்தார்.
18-வது பிரிக்ஸ் உச்சி மாநாடு டெல்லியில் சனிக்கிழமை தொடங்கியது. முதல் நாளில் உலகத் தலைவர்களும், உறுப்பு நாடுகளின் தலைவர்களும் பங்கேற்றுப் பேசினர். முதல் நாள் முடிவில் “புது டெல்லி பிரகடனம்” கூட்டாக பிரிக்ஸ் அமைப்பின் தலைவர்களால் வெளியிடப்பட்டது.
இந்நிலையில் பிரிக்ஸ் மாநாட்டின் 2-ஆம் நாள் நிகழ்ச்சிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. இதில் நைஜீரியா துணை அதிபர் காஷிம் ஷெட்டிமா, மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராஹிம், உகாண்டா துணை அதிபர் ஜெசிகா அலுபோ, சவுதி வெளியுறவுத் துறை அமைச்சர் இளவரசர் பைசல் பின் பர்ஹான் அல் சவுத், கஜகஸ்தான் அதிபர் காஸ்யம் ஜோம்ரத் தொகாயேவ், புருண்டி அதிபர் இவாரிஸ்ட் டேஷிம்யே, பிலிப்பைன்ஸ் அதிபர் பெர்டினாந்த் ஆர் மார்கோஸ் ஆகியோர் டெல்லிக்கு வந்தனர். அவர்களைப் பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றுத் தனித்தனியே சந்தித்துப் பேசினார்.
2-ம் நாளும் தொடர்ந்த ஆலோசனை
இந்தியா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்கள் இரண்டாம் நாளான இன்றும் பல்வேறு விவகாரங்கள் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் “அனைவரையும் உள்ளடக்கிய உலகளாவிய வளர்ச்சி”குறித்து விவாதிக்கப்பட்டது.
அப்போது பிரதமர் மோடி பேசுகையில், “உலகின் மக்கள் தொகையில் 50 சதவீதம், உலகளாவிய ஜிடிபியில் (GDP) 40 சதவீதம் மற்றும் உலக வர்த்தகத்தில் 25 சதவீதத்திற்கும் அதிகமான பங்கைக் கொண்டுள்ள பிரிக்ஸ் அமைப்பில் உள்ள நாடுகளுக்குள் ஒருங்கிணைந்த ஒத்துழைப்பு தேவை” என்று வலியுறுத்தினார்.
சீன அதிபர் ஜி ஜின்பிங் பேசுகையில், “இந்தியாவும் சீனாவும் பல விஷயங்களில் வேறுபட்டிருந்தாலும், ஒருவருக்கொருவர் பலத்தை வலுப்படுத்திக்கொள்ளவும், பரஸ்பர ஆதரவை வழங்கவும், கூட்டாக வெற்றியை அடையவும், இணைந்து முன்னேறவும் முழுத் திறன் கொண்டுள்ளன” என்று தெரிவித்தார்.
‘தொழில்நுட்பத்தை ஆயுதமாகப் பயன்படுத்துவது ஆபத்து’
பிரிக்ஸ் மாநாட்டின் 2-ம் நாளான இன்று உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார். அவர் பேசுகையில், “தொழில்நுட்பம் மற்றும் முக்கிய கனிமங்களை ஆயுதங்களாகப் பயன்படுத்துவதில் உள்ள ஆபத்துகளை பிரிக்ஸ் உறுப்பு நாடுகள் உணர வேண்டும். இல்லையெனில், கூட்டு முன்னேற்றம் மற்றும் செழிப்பு ஆகியவற்றில் உலகம் இதுவரை அடைந்துள்ள சாதனைகளை அது சீர்குலைத்துவிடும்.
தற்போதைய சூழலில் எந்தவொரு நெருக்கடியும் ஒரு குறிப்பிட்ட பிராந்தியத்திற்குள் மட்டும் முடங்கிவிடுவதில்லை. பதற்றம் அதிகரித்து வருவதை இந்த உலகம் காண்கிறது. இது சராசரி மக்களின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க எதிர்மறைப் பாதிப்பையும் ஏற்படுத்துகிறது.
பெருந்தொற்று நோய்கள், காலநிலை பேரழிவுகள், சப்ளை செயின் (வழங்கல் சங்கிலி) பாதிப்பு ஆகியவை ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன.
இன்றைய உலகில், எந்தவொரு நெருக்கடியும் ஒரு பிராந்தியத்தோடு முடிந்துவிடுவதில்லை என்பதை சமீபத்திய நிகழ்வுகள் நிரூபித்துள்ளன. சீனாவின் வுஹானில் பரவத் தொடங்கிய கரோனா பெருந்தொற்று உலகம் முழுவதும் பரவியதை இதற்கு உதாரணமாகக் கொள்ளலாம்.
எனவே, பிரிக்ஸ் குழுவின் உள்ளே மீள்திறனை மேம்படுத்துவதற்கு நாங்கள் சிறப்பு முக்கியத்துவம் அளித்துள்ளோம். சவால்களை உரிய நேரத்தில் கண்டறிந்து, அவற்றை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதும், உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்வதும் மிக அவசியமாகும்.
இந்த அணுகுமுறையின் மூலம், தொற்றுநோய்களைத் தடுப்பதற்கும் அவற்றை எதிர்கொள்வதற்குமான 'பிரிக்ஸ் ஒருங்கிணைந்த முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்பு' குறித்து ஒருமித்த கருத்து எட்டப்பட்டுள்ளது. முன்கூட்டிய எச்சரிக்கை ஒருங்கிணைப்பு அமைப்பிற்கான வழிகாட்டுதல்களும் தயார் நிலையில் உள்ளன.
4 தூண்கள்
இந்தியாவின் தலைமையின்கீழ், 4 விதமான தூண்களில் எங்களது முயற்சியை ஒருங்கிணைத்துள்ளோம். “மீள்திறன், புதுமை, ஒத்துழைப்பு மற்றும் நிலைத்தன்மை” ஆகியவையே அந்த நான்கு தூண்களாகும். உங்களின் ஒத்துழைப்பு மற்றும் ஆதரவுடன், நமது தொலைநோக்குப் பார்வையை இரு தரப்பினருக்கும் வெற்றி தரும் சூழலாக மாற்ற முடிந்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
இந்திய நாகரிகமும் இயற்கையும் எங்களது தாயாக உருவகப்படுத்தப்பட்டுள்ளன. வளர்ச்சியும் சுற்றுச்சூழலும் ஒன்றுக்கொன்று மாற்றானவை அல்ல; மாறாக அவை ஒன்றையொன்று பூர்த்தி செய்பவை என்று பல நூற்றாண்டுகளாக நாம் நம்பி வருகிறோம்.
பிரிக்ஸ் அமைப்பிலும், மனித மேம்பாட்டிற்கும் சுற்றுச்சூழலுக்கும் இடையே சமநிலையைப் பேண வேண்டியதன் அவசியத்தை நாங்கள் வலியுறுத்தியுள்ளோம். இதுவே நிலைத்தன்மையின் அடித்தளம். இது வருங்காலத் தலைமுறையினருக்கான நமது பொறுப்பும் கூட. இதற்காக ‘ஸ்மார்ட் கிரிட்கள்’ மற்றும் ஆற்றல் சேமிப்புக்கான ‘பிரிக்ஸ் டிஜிட்டல் சிறப்பு மையம்’ ஒன்றை நாங்கள் நிறுவியுள்ளோம்” என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
சீன அதிபர் ஜி ஜின்பிங்
தெற்குலக நாடுகளுக்கு ஒற்றுமை தேவை
பிரிக்ஸ் மாநாட்டை முடித்துக்கொண்டு சீன அதிபர் ஜி ஜின்பிங் முற்பகல் 12 மணியளவில் சீனாவுக்குப் புறப்பட்டுச் சென்றார். அவர் புறப்படும் முன் மாநாட்டில் பேசுகையில், “சர்வதேச நிலைமை சிக்கலானதாகவும், நிலையற்றதாகவும் இருக்கிறது. பல்வேறு அபாயங்களும் சவால்களும் ஒன்றன்பின் ஒன்றாக உருவாகி வருகின்றன. உலகத் தெற்கு நாடுகளின் பெரும்பான்மையினருடன் ஒன்றிணைந்து, சர்வதேச விவகாரங்களில் நேர்மறையான, நிலைப்படுத்தும் மற்றும் நன்மை பயக்கும் பங்கை ஆற்றி, மனிதகுலத்தின் பொது நலனை மேம்படுத்த வேண்டும்.
சர்வதேச சட்டத்தின் ஆட்சியை உலகத் தெற்குலக நாடுகள் கூட்டாக நிலைநிறுத்த வேண்டும். இறையாண்மை சமத்துவம், உள் விவகாரங்களில் தலையிடாமை மற்றும் தகராறுகளை அமைதியான முறையில் தீர்ப்பது போன்ற சர்வதேச உறவுகளின் அடிப்படை நெறிமுறைகளைப் பாதுகாக்க வேண்டும். இரட்டைத் தன்மையில்லாமல் சர்வதேச சட்டங்களும் விதிகளும் சமமாகப் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
பிரிக்ஸ் நாடுகள் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தையும் வளர்ச்சியையும் அடைய, அவை நடைமுறை ஒத்துழைப்பின் அடித்தளத்தை வலுப்படுத்த வேண்டும். வளர்ந்து வரும் நாடுகளின் ஆதரவைப் பெற்றிருப்பது மற்றும் உலகளாவிய தெற்கு நாடுகளை (Global South) இணைப்பது ஆகிய தன் சாதகமான அம்சங்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர நன்மைகளுக்குக் கட்டுப்பட்டு நிற்க வேண்டும். தொழில் மற்றும் மூலப்பொருள் விநியோகம் ஸ்திரமாக இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். அதற்கு ஒரு ஒருங்கிணைந்த சந்தையை உருவாக்க வேண்டும். கண்டுபிடிப்பு மையங்களை உருவாக்க வேண்டும். பாரம்பரிய தொழில்களை மேம்படுத்தி, வளர்ந்து வரும் தொழில்களை வளர்த்து, எதிர்காலத் தொழில்களுக்கான திட்டமிடலை மேற்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார்.
உக்ரைன் அமைதிப் பேச்சு: மோடி, ஜி ஜின்பிங் அழைப்பு
ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே கடந்த 2020-ஆம் ஆண்டிலிருந்து போர் நடந்து வருகிறது. ஏறக்குறைய 6 ஆண்டுகளாக நடக்கும் இப்போரில் இரு நாடுகளிலுமே கடும் பொருட்சேதமும் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள் ஆதரவு அளித்து வரும் நிலையில், ரஷ்யாவுக்கு மறைமுகமாகச் சீனாவும் ஆதரவு அளித்து வருகிறது.
இந்நிலையில் உக்ரைன் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கலந்துகொண்ட நிகழ்வில், “உக்ரைன் - ரஷ்யா இடையே நடக்கும் போரில் அமைதியைக் கொண்டுவர இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் உதவ வேண்டும். இந்த அமைதிப் பேச்சுவார்த்தையை உக்ரைனும் ரஷ்யாவும் வரவேற்கவும் தயாராக இருக்கின்றன” எனத் தெரிவித்தார்.
பிரிக்ஸ் மாநாட்டின் உணவுகள் என்ன?
பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற உலகத் தலைவர்களுக்குப் பிரதமர் மோடி நேற்று இரவு விருந்தளித்தார். இந்த விருந்தில் இந்தியாவின் பாரம்பரிய உணவுகள், சிறுதானியங்களால் செய்யப்பட்ட உணவுகள் மற்றும் இனிப்பு வகைகள் பரிமாறப்பட்டன.
குறிப்பாக, 'காந்த்வி மில்லி', 'கும்ப் கலூட்டி' ஆகியவை ஸ்டார்ட்டர்ஸ் உணவுகளாக வழங்கப்பட்டன. காந்த்வி மில்லி என்பது கடலை மாவில் செய்யப்பட்டு, ஆவியில் வேகவைத்து, கடுகு மற்றும் தேங்காய் சேர்த்து மசாலா தடவிப் பொரிக்கப்பட்ட உணவாகும். இந்த காந்த்வி மில்லியோடு குங்குமப்பூ மாம்பழக் கூழ் மற்றும் தயிர் வைத்துப் பரிமாறப்பட்டது.
பாலாடை மற்றும் தக்காளி மசாலா கொண்டு உருவாக்கப்பட்ட பனீர் லபாடார், குச்சி மார்மிக், தானியங்களில் செய்யப்பட்ட புலாவ், ஷாதூத் பிர்ணி, கேரட் - பீன்ஸ் பொரியல், தக்காளி பெல்லி சாறு, பீட்ரூட் தயிர் பச்சடி (ரெய்தா) ஆகியவையும், இனிப்பு வகைகளில் டெல்லி ஜிலேபியுடன் பழ ஐஸ்கிரீம், ஷாஹூத் பிர்ணி ஆகியவையும் பரிமாறப்பட்டன. வி.வி.ஐ.பி-க்களுக்கான இந்தச் சிறப்பு உணவுகளைத் தயாரிக்க 100-க்கும் மேற்பட்ட சமையல் கலைஞர்கள் வரவழைக்கப்பட்டிருந்தனர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பேருந்தில் வந்த மத்திய அமைச்சர்கள், முதல்வர்கள்
பிரிக்ஸ் மாநாட்டின் முதல் நாள் இரவில் பிரதமர் மோடி, உலகத் தலைவர்களுக்கு இரவு விருந்தளித்தார். இந்த விருந்தில் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல், அஸ்வினி வைஷ்ணவ், சிவராஜ் சிங் சவுகான், சர்பானந்த சோனாவால், கிரண் ரிஜிஜூ மற்றும் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், டெல்லி முதல்வர் ரேகா குப்தா, மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ், மேற்கு வங்க எதிர்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி, அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, உத்தரகாண்ட் முதல்வர் புஷ்பர் சிங் தாமி உள்ளிட்ட பாஜகவைச் சேர்ந்த பல்வேறு மாநில முதல்வர்கள் ஒரே பேருந்தில் வந்து விருந்தில் பங்கேற்றனர்.
மலேசியப் பிரதமர் பாடிய பாடல்
பிரதமர் மோடி அளித்த இரவு விருந்தில் உலகத் தலைவர்கள் பங்கேற்று முடித்த நிலையில், இசை மற்றும் நடனக் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. அப்போது மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராஹிம், பாலிவுட்டில் 1965-ஆம் ஆண்டு வெளியான 'தீன் தேவியான்' திரைப்படத்தில் வரும் “ஆப் கோ தும் யா கோய் ஹக்கீகத்” என்ற பாடலைப் பாடினார்.
மாநாட்டை வெற்றியாக்கியதற்கு நன்றி
பிரிக்ஸ் 2026 2-நாள் மாநாடு நிறைவடைந்த நிலையில், அதில் பங்கேற்ற அனைத்து உறுப்பு நாடுகளுக்கும் தலைவர்களுக்கும் பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார். அப்போது அவர் பேசியதாவது:
“ பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற நாடுகளும் தலைவர்களும் காட்டிய ஈடுபாடு மற்றும் வழங்கிய மதிப்புமிக்க பங்களிப்புகளுக்காக எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். உறுப்பினர்களின் முக்கியக் கருத்துகளும் ஆலோசனைகளும் நமது ஒத்துழைப்பிற்குப் பரந்த மற்றும் ஆழமான பரிமாணத்தை அளித்துள்ளன.
உங்களின் வருகையானது பிரிக்ஸ் அமைப்பின் வளர்ந்து வரும் முக்கியத்துவம், வெளிப்படைத்தன்மை மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய தன்மை ஆகியவற்றிற்குச் சான்றாக அமைந்துள்ளது.
இந்த மாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ‘புது டெல்லி பிரகடனம்’, நமது கூட்டுத் தொலைநோக்குப் பார்வைக்கும் எதிர்கால ஒத்துழைப்பிற்கும் தெளிவான வழிகாட்டுதலை வழங்கும் என நம்புகிறோம்.
நண்பர்களே, பிரிக்ஸ் அமைப்பு தனது 30-வது ஆண்டிற்குள் அடியெடுத்து வைக்கவுள்ளது. வெறும் கருத்துகளையும் உறுதிமொழிகளையும் மட்டுமல்லாமல், உறுதியான முடிவுகளையும் இப்போது உலகம் நம்மிடமிருந்து எதிர்பார்க்கிறது.
நமது கூட்டு முயற்சிகள் மூலம் இந்த எதிர்பார்ப்புகளை நாம் நிச்சயமாக நிறைவேற்றுவோம் என்று நான் உறுதியாக நம்புகிறேன். அடுத்ததாக இந்த மாநாட்டை நடத்தவுள்ள சீனாவிற்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை தெரிவித்துக்கொள்கிறேன் ” என்று தெரிவித்தார்.