

ஜபல்பூர்: மருத்துவ ஆராய்ச்சிக்காக உடலை தானமாக வழங்குவேன். வருங்கால வைப்பு நிதி மூலம் கிடைக்கும் ரூ. 1 கோடியை பிஎம் கேர்ஸ் நிதிக்கு அளிப்பேன் என்று மத்திய பிரதேச உயர் நீதிமன்ற நீதிபதி அவனிந்திர குமார் சிங் தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேசத்தின் எட்டா நகரைச் சேர்ந்தவர் அவனிந்திர குமார் சிங் (62). வழக்கறிஞரான இவர் கடந்த 1990-ம் ஆண்டு கீழமை நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றார். பல்வேறு நீதிமன்றங்களில் பணியாற்றிய அவர் கடந்த 2023-ம் ஆண்டு மே 1-ம் தேதி மத்திய பிரதேச உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றார்.
சுமார் 37 ஆண்டுகள் நீதித் துறையில் சேவை செய்த அவர் கடந்த 17-ம் தேதி ஓய்வு பெற்றார். அன்றைய தினம் ஜபல்பூர் நகரில் அவருக்கு பிரிவு உபசார விழா நடைபெற்றது. அப்போது நீதிபதி அவனிந்திர குமார் சிங் பேசியதாவது: நாம் கடவுளை வழிபடுகிறோம். அவருக்கு சேவை செய்கிறோம்.
அதோடு மட்டுமல்லாமல் கடவுள் படைத்த அனைத்து உயிர்களுக்கும் சேவை செய்வது நமது கடமை ஆகும். நானும் எனது மனைவி இந்திராவும் எங்களது உடல்களை மருத்துவ மாணவர்களின் ஆராய்ச்சிக்காக தானமாக வழங்க முடிவு செய்துள்ளோம்.
இதுதொடர்பான உறுதிமொழி பத்திரத்திலும் கையெழுத்திட்டு விட்டோம். வருங்கால வைப்பு நிதி மூலம் எனக்கு ரூ.1 கோடியே 10 லட்சம் கிடைக்கும். இந்த தொகை முழுவதையும் பிஎம் கேர்ஸ் நிதிக்கு வழங்க முடிவு செய்துள்ளேன். எனது வாழ்க்கையின் அனைத்து வெற்றிக்கும் மனைவியே காரணம். எங்களது உடல்களை மருத்துவ ஆராய்ச்சிக்கு வழங்கவும் வருங்கால வைப்பு நிதியை பிஎம் கேர்ஸ் நிதிக்கு வழங்கவும் எனது மனைவியே ஆலோசனை கூறினார். இதை அப்படியே ஏற்றுக்கொண்டேன்.
சுமார் 37 ஆண்டு கால நீதிபதி வாழ்க்கையில் நூறு சதவீத நேர்மையை கடைபிடித்து உள்ளேன். விமர்சனங்களை பார்த்து அஞ்சக்கூடாது. எவ்வித அழுத்தத்துக்கும் ஆளாகக்கூடாது. நேர்மையாக, நிதானமாக இருந்து தீர்ப்பு வழங்க வேண்டும் என்று மூத்த நீதிபதி ஒருவர் எனக்கு அறிவுரை கூறினார்.
அவரது அறிவுரையை கண்டிப்புடன் பின்பற்றினேன். நீதிபதி பதவியில் இருந்து ஓய்வு பெற்றாலும் மக்கள் சேவையில் தொடர்ந்து ஈடுபடுவேன். ஏழைகளுக்கு தேவையான சட்ட ஆலோசனைகளை வழங்குவேன். இவ்வாறு நீதிபதி அவனிந்திர குமார் சிங் தெரிவித்தார்.