புதுடெல்லி: மகளிர் இடஒதுக்கீடு சட்டத்திருத்த மசோதா தோற்கடிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் உள்ள ராகுல் காந்தியின் வீட்டை பாஜக மகளிர் அணியினர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
டெல்லி சுனேரி பார்க் பகுதியில் உள்ள ராகுல் காந்தியின் இல்லத்தை நோக்கி நடைபெற்ற இந்த பேரணியில், பாஜக பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஹேமமாலினி, கமல்ஜீத் செஹ்ராவத், பன்சூரி ஸ்வராஜ், மஞ்சு சர்மா, வத்ஸல்யா குப்தா, டெல்லி முதல்வர் ரேகா குப்தா, டெல்லி மாநில பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா, மத்திய அமைச்சர் ரக்ஷா கட்ஸே, நாடாளுமன்ற உறுப்பினர் மனோஜ் திவாரி உட்பட ஏராளமானோர் இந்த கலந்து கொண்டனர்.
மோதிலால் நேரு மார்க்கில் திரண்டிருந்த போராட்டக்காரர்கள் மத்தியில் உரையாற்றிய ஹேமமாலினி, “இந்த மசோதாவை நிறைவேற்றுவதற்காக பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக உழைத்தார். ஆனால், எதிர்க்கட்சிகள் இந்த மசோதா நிறைவேறுவதை தடுத்துவிட்டன.
எதிர்க்கட்சிகளின் இந்த செயல் எங்களுக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. பெண்களின் ஆற்றல் மீது எதிர்க்கட்சிகளுக்கு நம்பிக்கை இல்லை. பெண்களுக்கு உரிமைகள் கிடைப்பதை அவர்கள் விரும்பவில்லை” என குற்றம் சாட்டினார்.
கைகளில் கருப்புக் கொடிகளை ஏந்திக்கொண்டு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பியவாறு பேரணியாகச் சென்ற பாஜக மகளிர் அணியினரை போலீசார் ராகுல் காந்தியின் வீடு அமைந்துள்ள பகுதிக்கு முன்பாக தடுத்து நிறுத்தினர்.
தொடர்ந்து முன்னோக்குச் செல்ல முயன்றவர்கள் மீது தண்ணீர் பீய்ச்சு அடிக்கப்பட்டது. மேலும், போராட்டக்காரர்கள் பலரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றிச் சென்றனர்.