புதுடெல்லி: மகளிர் இடஒதுக்கீடு தொடர்பான மசோதாவை எதிர்த்ததன் மூலம் காங்கிரஸ் கட்சி தனது கோர முகத்தை வெளிப்படுத்தி உள்ளது என்று பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஸ்மிருதி இரானி விமர்சித்துள்ளார்.
டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஸ்மிருதி இரானி, “மகளிர் இடஒதுக்கீடு மசோதா, அரசியல் லட்சியங்களைக் கொண்ட சாதாரணப் பெண்களை வலுப்படுத்தும் நோக்கம் கொண்டதே தவிர, ஒரு புதிய வாக்கு வங்கியை உருவாக்கும் நோக்கம் கொண்டது அல்ல.
குஜராத் முதல்வர் ஆனதில் இருந்து பிரதமர் நரேந்திர மோடியின் அரசியல் பயணத்தை நாம் உற்று நோக்கினால் அவருக்கு ஆதரவாக வாக்களித்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து மட்டுமே வந்துள்ளது. எனவே, ஒரு புதிய வாக்கு வங்கியை உருவாக்கும் முயற்சி ஏதும் இதில் இருப்பதாகக் கருத முடியாது.
2014, 2019, 2024 என எந்த தேர்தலாக இருந்தாலும் நாட்டின் பெண்கள் பிரதமர் மோடிக்கு வாக்களித்து தொடர்ந்து ஆதரவு அளித்து வருகின்றனர்.
சாதாரண பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் ஒரு மசோதா இது. அரசியலை வாரிசுரிமையாகப் பெற்ற பிரியங்கா காந்தி போன்றவர்களால் இதை புரிந்து கொள்ள முடியாது. நாட்டின் சாதாரணப் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் பிரதமர் மோடியின் இந்த முயற்சியை பிரியங்கா காந்தி புரிந்துகொள்வார் என்று நான் எதிர்பார்க்கவில்லை.
60 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் இந்த நாட்டில் 11 கோடி பெண்களுக்கு கழிப்பறை வசதி மறுக்கப்பட்டது என்பதை பெண்கள் நினைவில் கொள்வார்கள். 25 கோடி பெண்களுக்கு வங்கிக் கணக்கு தொடங்குவதற்கான ஆதரவு மறுக்கப்பட்டது என்பதையும் அவர்கள் நினைவில் கொள்வார்கள்.
33% இடஒதுக்கீட்டுக்காகப் போராடி வரும் இந்த நாட்டின் அரசியல் கள பெண்களுக்கு எதிராக, காங்கிரஸ் கட்சியும் அதற்கு ஆதரவு அளிக்கும் கட்சிகளும் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளன.
2023-ல் நிறைவேற்றப்பட்ட மசோதாவை தாங்கள் ஆதரிப்பதாக காங்கிரஸ் கட்சியின் இன்றைய செய்தியாளர் சந்திப்பில் பிரியங்கா காந்தி கூறி இருக்கிறார். இது திகைப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த மசோதாவில் தொகுதி மறுவரையறை பற்றிய குறிப்பு இடம்பெற்றுள்ளது. ஆனால், தொகுதி மறுவரையறைக்கான குழுவின் மீதோ அல்லது அதற்கான ஏற்பாட்டின் மீதோ தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றும் காங்கிரஸ் கட்சி கூறுகிறது. இது அந்த கட்சியின் இரட்டை வேடத்தையே காட்டுகிறது.
நாட்டின் அரசியலமைப்பு ஏற்பாட்டின் மீதோ, நாடாளுமன்றத்தின் மீதோ அல்லது நாட்டின் பெண்கள் மீதோ காங்கிரசுக்கு சிறிதும் நம்பிக்கை இல்லை. நாட்டின் பெண்கள் முன் காங்கிரஸ் தனது கொடூர முகத்தை அம்பலப்படுத்திக் கொண்டுள்ளது” என தெரிவித்தார்.