சஹாரன்பூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்ற நிதின் நவீன்
சஹாரன்பூர்: உத்தரப் பிரதேசத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் மிகப் பெரிய பெரும்பான்மையுடன் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று அக்கட்சியின் தேசிய தலைவர் நிதின் நவீன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேச சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு அங்கு தேர்தல் சார்ந்த பணிகள் தீவிரமடைந்து வருகின்றன. தேர்தலை முன்னிட்டு, நிதின் நவீன் உத்தரப்பிரதேசத்தில் இரண்டு நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டார்.
சஹாரன்பூரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நிதின் நவீன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், “2027 உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக மிகப் பெரிய பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைக்கும். பாஜக நிகழ்ச்சிகளில் தொண்டர்கள் மட்டுமல்லாது, பொதுமக்களும் பெருமளவில் கலந்து கொள்வதைப் பார்க்கும்போது, பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் மீது மக்கள் எந்த அளவுக்கு நம்பிக்கை வைத்துள்ளனர் என்பது தெரிகிறது. 2027-க்கான நமது இலக்கை நாம் அடைவோம் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது.
ஒரு காலத்தில் மாஃபியாக்களுக்காக அறியப்பட்ட உத்தரப் பிரதேசம் இன்று வளர்ச்சிக்காக அறியப்படுகிறது. குறைக்கடத்திகள், செயற்கை நுண்ணறிவு போன்ற துறைகளில் இளைஞர்கள் தலைமையிலான முன்னேற்றம் உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்று வருகிறது.
உத்தரப் பிரதேசத்தின் வளர்ச்சி, விரைவுச் சாலைகள் புதிய மைல்கற்களாக பெயர் பெற்றுள்ளன. பிரம்மோஸ் போன்ற ஏவுகணைகள் இங்கு தயாரிக்கப்படுகின்றன. இவையே உத்தரப் பிரதேசத்தின் புதிய அடையாளம். உத்தரப் பிரதேசத்தை சிறந்த மாநிலமாக மாற்றும் முனைப்பில் நாங்கள் ஒன்றிணைந்து பயணிக்கிறோம்” என தெரிவித்தார்.
முன்னதாக, மீரட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய நிதின் நவீன், “உத்தரப் பிரதேசத்தில் பாஜக தலைமையிலான ஆட்சியில் நம்பிக்கை சூழல் நிலவுவதை நம்மால் பார்க்க முடிகிறது. ஒரு காலத்தில் இங்கு நிச்சயமற்ற தன்மை நிலவியது. முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான ஆட்சியில் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நிலைநாட்டப்பட்டுள்ளது.
ஒரு காலத்தில் உத்தரப் பிரதேசத்தில் வளர்ச்சி தடைபட்டிருந்தது. ஆனால், இன்று வளர்ச்சியின் பாதையில் உத்தரப் பிரதேசம் நடைபோடுகிறது. வளர்ந்த மாநிலமாக மாறுவதை நோக்கியதாக இந்த பயணம் உள்ளது” என தெரிவித்தார்.