மேற்கு வங்கத்தில் மறுதேர்தல் நடத்தப்பட்ட ஃபால்டா தொகுதியில் பாஜக வேட்பாளர் அபார வெற்றி

மேற்கு வங்கத்தில் மறுதேர்தல் நடத்தப்பட்ட ஃபால்டா தொகுதியில் பாஜக வேட்பாளர் அபார வெற்றி
Updated on
1 min read

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் மறு தேர்தல் நடத்தப்பட்ட ஃபால்டா தொகுதியில் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக அபார வெற்றி பெற்றுள்ளது.

மேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளுக்கும் கடந்த ஏப்.23, 29-ம் தேதிகளில் இரு கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. 29-ம் தேதி ஃபால்டா தொகுதியில் வாக்குப்பதிவின்போது முறைகேடுகள் நடந்ததாக புகார்கள் எழுந்தன. இதை ஆய்வு செய்த தேர்தல் ஆணையம், ஃபால்டா தொகுதியின் 285 வாக்குச் சாவடிகளிலும் மே 21-ம் தேதி மறுதேர்தல் நடத்தப்படும் என்று அறிவித்தது.

இதர 293 தொகுதிகளுக்கான முடிவுகள் கடந்த 4-ம் தேதி வெளியிடப்பட்டன. இதில் பாஜக 207 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. பாஜக மூத்த தலைவர் சுவேந்து அதிகாரி 9-ம் தேதி முதல்வராகப் பதவியேற்றார். இந்த சூழலில், தேர்தல் போட்டியில் இருந்து விலகுவதாக ஃபால்டா தொகுதியின் திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் ஜஹாங்கீர் கான் கடந்த 19-ம் தேதி அறிவித்தார்.

ஏற்கெனவே அறிவித்தபடி ஃபால்டா தொகுதியில் கடந்த 21-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. 86.71 சதவீத வாக்குகள் பதிவாகின. வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. ஆரம்பம் முதலே பாஜக வேட்பாளர் தேபாங்ஷு பாண்டா முன்னிலையில் இருந்தார். இறுதியில் 1,49,666 வாக்குகள் பெற்று அவர் வெற்றி பெற்றார்.

மார்க்சிஸ்ட் வேட்பாளர் சாம்பு நாத் குர்மிக்கு 40,645 வாக்குகள் கிடைத்தன. காங்கிரஸ் வேட்பாளர் அப்துர் ரசாக் மொல்லா 10,084 வாக்குகளைப் பெற்றார். போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்த திரிணமூல் வேட்பாளர் ஜஹாங்கீர் கானுக்கு 7,783 வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளன.

ஃபால்டா தொகுதியில் 1,09,021 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் தேபாங்ஷு பாண்டா அபார வெற்றியைப் பெற்றிருக்கிறார். இவர் ஒரு வழக்கறிஞர் ஆவார். தேர்தல் வெற்றி குறித்து முதல்வர் சுவேந்து அதிகாரி கூறியபோது, ‘‘ஃபால்டா தொகுதியில் பாஜகவை வெற்றி பெறச் செய்த மக்களுக்கு நன்றி. இனிமேல் தங்கமயமான எதிர்காலத்தை ஃபால்டா மக்களுக்கு ஏற்படுத்தி தருவேன். இனி மேற்குவங்கம் வெற்றிப் பாதையில் பயணம் செய்யும்’’ என்றார்.

மேற்கு வங்கத்தில் மறுதேர்தல் நடத்தப்பட்ட ஃபால்டா தொகுதியில் பாஜக வேட்பாளர் அபார வெற்றி
“மேகேதாட்டு விவகாரத்தில் முதல்வர் விஜய் வாய் திறந்து பேசுவாரா?” - கே.என்.நேரு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in