பாஜக எம்எல்சி-க்கள் என்.ரவிக்குமார், ஷஷில் ஜி.நமோஷி ஆகியோர் கலபுர்கியில் புதன்கிழமை செய்தியாளர்களிடம் பேசினர்.
புதுடெல்லி: உத்தர பிரதேசம், பிஹார், மகாராஷ்டிரா, கர்நாடகம் ஆகிய 4 மாநிலங்களின் சட்ட மேலவைகளில் காலியாக இருந்த 28 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஓரிடத்தில்கூட வெற்றி பெறவில்லை.
நான்கு மாநில சட்ட மேலவைகளில் காலியாக உள்ள 28 உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் கடந்த 23-ம் தேதி நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
இந்தத் தேர்தலில் பாஜக 10-க்கும் மேற்பட்ட இடங்களைக் கைப்பற்றியது. இதுவரை முடிவு வெளியான தொகுதிகளில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. குறிப்பாக, காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் கர்நாடகத்தில்கூட அக்கட்சிக்கு வெற்றி கிடைக்கவில்லை. கர்நாடகத்தில் 4 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் பாஜக 3 இடங்களிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஓரிடத்திலும் வெற்றி பெற்றன.
பாஜக ஆட்சி நடைபெறும் உத்தர பிரதேசத்தில் 11 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் நேற்று மாலை நிலவரப்படி 4-ல் பாஜகவும் 2-ல் சமாஜ்வாதி கட்சியும் வெற்றி பெற்றன. எஞ்சிய 5 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடியின் தொகுதியான வாராணசிக்கு உட்பட்ட எம்எல்சி தொகுதியில் சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாஜக, ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடைபெறும் பிஹாரில் 8 இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜக 1, ஐக்கிய ஜனதா தளம் 1, ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) 1, பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி (ஜேஎஸ்பி) 1, சுயேட்சை 1 தொகுதியில் வெற்றி பெற்றுள்ளனர். இதன்மூலம், பிரசாந்த் கிஷோரின் ஜன்சுராஜ் கட்சி மேலவையில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தது. மீதம் உள்ள தொகுதியில் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்றது.
மகாராஷ்டிராவில் 5 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில், ஆளும் மகாயுதி கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக 2 இடங்களைக் கைப்பற்றியது. சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே) ஓரிடத்தில் வெற்றி பெற்றது. எதிர்க்கட்சியான தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சரத் பவார் பிரிவு 2 இடங்களைக் கைப்பற்றியது.
பிரதமர் மோடி கிண்டல்
மேலவைத் தேர்தல் முடிவுகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் சமூக வலைதளப் பதிவில், “உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா, பிஹார், கர்நாடகம் ஆகிய 4 பெரிய மாநிலங்களில் சட்ட மேலவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் வாக்குச்சீட்டுகள் பயன்படுத்தப்பட்டன. இதில் காங்கிரஸ் எத்தனை இடங்களில் வெற்றி பெற்றது என்று யூகியுங்கள்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.