

சுவேந்து அதிகாரி
கொல்கத்தா: சுவேந்து அதிகாரி மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறி, அதனைக் கண்டிக்கும் விதமாக, மேற்கு வங்கம் மாநிலம் முழுவதும் பாஜக சார்பில் இன்று போராட்டம் நடைபெற்றது.
மேற்கு வங்க சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி நேற்று புரூலியாவில் பாஜக நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தினர். பின்னர், இரவு மிட்னாபூருக்கு அவர் காரில் சென்றார். அப்போது அவரது காரை திரிணமூல் காங்கிரஸ் வழிமறித்து தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.
இதைக் கண்டித்து சந்திரகோனா போலீஸ் நிலையத்தில் சுவேந்து அதிகாரி நேற்று இரவு தர்ணாவில் ஈடுபட்டார். அவர் கூறும்போது, “நான் செல்லும் இடமெல்லாம் திரிணமூல் காங்கிரஸார் என்னை குறிவைத்து தாக்குதல் நடத்துகின்றனர். மிட்னாபூரில் தாக்குதல் நடத்தியபோது போலீஸார் வேடிக்கை பார்த்தனர். தாக்குதலில் தொடர்புடைய திரிணமூல் காங்கிரஸார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
இந்த விவகாரம் தொடர்பாக மேற்கு வங்கம் முழுவதும் பாஜக தொண்டர்கள் இன்று பல்வேறு போராட்டங்களை நடத்தினர். மிட்னாபூர், சோனாமுகி உள்ளிட்ட பகுதிகளில் சாலை மறியல் போராட்டங்கள் நடைபெற்றன.
இது தொடர்பாக திரிணமூல் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஆருப் சக்கரவர்த்தி கூறும்போது, “எதிர்க்கட்சி தலைவர் சுவேந்து அதிகாரி மீது யாரும் தாக்குதல் நடத்தவில்லை. அவர் காரில் சென்றபோது, ‘ஜெய் பங்களா’ என்று மட்டுமே எங்கள் தொண்டர்கள் குரல் எழுப்பினர். இதைகூட சுவேந்து அதிகாரியால் சகித்துக் கொள்ள முடியவில்லை” என்று தெரிவித்தார்.
முன்னதாக, திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் அரசியல் வியூக நிறுவனமான ஐ-பேக்கின் கொல்கத்தா அலுவலகம், அதன் இயக்குநர் பிரதீக் ஜெயின் உட்பட 10 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் அண்மையில் சோதனை நடத்தினர். அப்போது சோதனை நடந்த இடங்களில் முதல்வர் மம்தா பானர்ஜி நுழைந்து சில ஆவணங்கள், மின்னணு சாதனங்களை எடுத்துச் சென்றார்.
இது தொடர்பாக அமலாக்கத் துறை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்த விவகாரத்தில் திரிணமூல் காங்கிரஸ் - பாஜக இடையே வார்த்தைப் போர் வலுத்து வருவதும் குறிப்பிடத்தக்கது