

அமர்த்தியா சென்
புதுடெல்லி: நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென்னுக்கு எஸ்ஐஆர் விசாரணை நோட்டீஸ் அனுப்பப்பட்டது தொடர்பாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தேர்தல் ஆணையத்தைக் கடுமையாகச் சாடியுள்ளார்.
எஸ்.ஐ.ஆர் எனப்படும் வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை இந்தியத் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. பிஹாரில் முதற்கட்டமாகத் தொடங்கப்பட்ட இப்பணி, தற்போது புதுச்சேரி, குஜராத், கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், சிறப்பு தீவிர திருத்தம் (SIR) செயல்முறையின் ஒரு பகுதியாக கொல்கத்தாவில் விசாரணைக்கு ஆஜராகுமாறு இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி உள்ளிட்டோருக்கு தேர்தல் ஆணையம் சம்மன் அனுப்பியது பெரும் சர்சசையானது.
இதனைத் தொடர்ந்து, நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென்னை தேர்தல் அதிகாரிகளின் முன் ஆஜராகி தனது அடையாளங்களை நிரூபிக்கக் கோரியதாக தெரிகிறது.
இதற்கு, மேற்குவங்க முதலல்வர் மம்தா பானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மம்தா, தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், “நோபல் பரிசு பெற்றவரும், 90 வயது நிரம்பியவரும், உலகளவில் மதிக்கப்படும் அறிஞருமான பேராசிரியர் அமர்த்தியா சென், தனது அடையாளங்களை நிரூபிக்க தேர்தல் ஆணைய அதிகாரிகளின் முன் ஆஜராகும்படி கேட்கப்பட்டிருப்பது பெரும் அவமானத்திற்குரிய விஷயம்” என தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்பு முதல்வர், தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எழுதிய சமீபத்திய கடிதத்தில், “மேற்கு வங்கத்தில் நடைபெற்று வரும் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணியைக் கண்டித்து எழுதப்பட்டது. தேர்தல் ஆணையத்தின்படி, தரவுப் பதிவுகளிலிருந்து கணக்கிடப்பட்டதில், சென் மற்றும் அவரது தாயார் அமிதா சென் ஆகியோருக்கு இடையிலான வயது வித்தியாசம் 15 ஆண்டுகளுக்கும் குறைவாக இருந்ததால் அவரின் அடையாளங்களை கேட்டுள்ளனர்.
வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியின் போது புலம்பெயர் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களையும் அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும் நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென் விசாரணைக்கு நேரில் ஆஜராகத் தேவையில்லை, மேலும் இந்த சிக்கலைத் தீர்க்க அவரது சார்பில் ஒரு பிரதிநிதி மூலம் ஆவணங்களைச் சமர்ப்பிக்கலாம்.” என கூறப்படுகிறது.