புதுடெல்லி: கட்சியின் 1937-ம் ஆண்டு தீர்மானத்துக்கு இணங்க, ‘வந்தே மாதரம்’ பாடலின் முதல் இரண்டு சரணங்களை மட்டுமே பாடுவது என்ற காங்கிரஸ் செயற்குழுவின் முடிவை கண்டித்து பாஜக தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.
பாஜகவில் புதிதாக அமைக்கப்பட்ட கட்சியின் தேசியக் குழுவின் முதல் அறிமுகக் கூட்டம் புதுடெல்லியில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் தலைமை தாங்கினார். புதிய நிர்வாகிகள் பலரும் இதில் கலந்து கொண்டனர். தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’ பாடலுடன் கூட்டம் தொடங்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில், காங்கிரஸ் கட்சியின் 1937-ம் ஆண்டு தீர்மானத்துக்கு இணங்க, ‘வந்தே மாதரம்’ பாடலின் முதல் இரண்டு சரணங்களை மட்டுமே கட்சி நிகழ்ச்சிகளில் பாடுவது என்ற அதன் சமீபத்திய முடிவை கண்டித்து பாஜக தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.
ஐந்து பக்கங்கள் கொண்ட அந்த தீர்மானத்தின் விவரம்: ‘வந்தே மாதரம்’ பாடலின் முதல் இரண்டு சரணங்களை மட்டுமே பாடுவது என்ற 1937-ஆம் ஆண்டு தீர்மானத்தை மீண்டும் வலியுறுத்தும் வகையில், ஆகஸ்ட் 19, 2026 அன்று காங்கிரஸ் செயற்குழு எடுத்த முடிவை பாஜக வன்மையாகக் கண்டிக்கிறது.
‘வந்தே மாதரம்’ பாடல் இந்தியாவின் தேசியப் பாடலாகவும், தேசிய உணர்வின் அழியாத அடையாளமாகவும், சுதந்திரப் போராட்டத்தின் உன்னதமான பாரம்பரியமாகவும் விளங்குகிறது. இதனை அங்கீகரித்து, அதன் கவுரவம், கண்ணியம், மரபு மற்றும் தேசியத் தன்மை பாதுகாக்கப்பட வேண்டும்.
‘வந்தே மாதரம்’ பாடலை தேசிய பாடல் என 1950-ஆம் ஆண்டு அரசியலமைப்புச் சபை அறிவித்தது. அதோடு, 'ஜன கண மன' பாடலுக்கு இணையான சட்டப்பூர்வ பாதுகாப்பு தேசியப் பாடலுக்கும் 2026-ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தால் வழங்கப்பட்டுள்ளது.
‘வந்தே மாதரம்’ பாடலை வகுப்புவாத அழுத்தங்கள், அரசியல் சமரசங்கள், குறுகிய வாக்கு வங்கி அரசியல் ஆகியவற்றுக்குள் அடைக்கும் ஒவ்வொரு முயற்சியையும் பாஜக எதிர்க்கும்.
இந்தியாவின் அரசியலமைப்பு நிறுவனங்கள் மற்றும் நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்ட சட்டங்களைவிட, காங்கிரஸ் செயற்குழுவின் எந்தவொரு தீர்மானமும் மேலானதாக இருக்க முடியாது. இதை அக்கட்சிக்கு நினைவூட்டுவதோடு, 1937-ஆம் ஆண்டின் அரசியல் சமரசத்தை, 1950-ஆம் ஆண்டின் அரசியலமைப்பு முடிவு மற்றும் 2026-ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்ட சட்டத்திற்கும் மேலானதாக நிறுவ முடியாது.
முஸ்லிம் லீக்கின் ஆட்சேபனைகள், அதைத் தொடர்ந்து எழுந்த வகுப்புவாத மற்றும் பிரிவினைவாதக் கோரிக்கைகள் சார்ந்த அரசியல் சூழல் காரணமாக, ‘வந்தே மாதரம்’ பாடல் பாடுவதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதன் வரலாறு குறித்து பாஜக பொதுமக்களுக்கு எடுத்துரைக்கும்.
‘வந்தே மாதரம்’ என்பதை "ஏகாதிபத்திய எதிர்ப்பு முழக்கம்" மற்றும் "மிகவும் தூய தேசிய உணர்வு" ஆகியவற்றுடன் இணைத்து மகாத்மா காந்தி விவரித்த வரலாற்றுச் சிறப்புமிக்க கூற்றை ஒவ்வொரு தனிமனிதரிடமும் கொண்டு சேர்க்க பாஜக பாடுபடும்.
இதற்காக, பாஜக தொண்டர்கள் மூலம் நாடு தழுவிய பிரச்சாரம் முன்னெடுக்கப்படும். இதன் வாயிலாக ‘வந்தே மாதரம்’ பாடலின் வரலாறு, பொருள், தேசிய முக்கியத்துவம் மற்றும் அதன் உன்னதமான மரபு ஆகியவை இந்தியாவின் ஒவ்வொரு மூலை முடுக்கிற்கும் கொண்டு செல்லப்படும்.
இதன் மூலம் ஆறு சரணங்களைக் கொண்ட முழுமையான தேசியப் பாடலும் அதன் வரலாறும் மறக்கடிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதுடன், இந்தியாவின் சுதந்திரம், போராட்டம், தியாகம் மற்றும் தேசிய விழிப்புணர்வு ஆகியவற்றுடன் ‘வந்தே மாதரம்’ எவ்வளவு ஆழமாகப் பிணைந்துள்ளது என்பதை வருங்கால சந்ததியினர் புரிந்துகொள்வதை பாஜக உறுதி செய்யும்.
அரசியல் ஆதாயங்களுக்காகவோ அல்லது ஒரு தரப்பினரைத் திருப்திப்படுத்தும் நோக்கத்துக்காகவோ ‘வந்தே மாதரம்’ பாடலின் கண்ணியம் மற்றும் மரபு விஷயத்தில் எவ்வித சமரசமும் செய்துகொள்ளப்படக் கூடாது.
இது ஏதோ ஓர் அரசியல் கட்சியுடன் மட்டும் தொடர்புடைய விவகாரம் அல்ல. இது இந்தியாவின் கண்ணியம் மற்றும் நாட்டின் சுதந்திரத்துக்காகத் தங்கள் அனைத்தையும் அர்ப்பணித்த எண்ணற்ற தேசபக்தர்களின் மரபு சார்ந்த விஷயம்.
‘வந்தே மாதரம்’ என்ற சொற்கள் ஒரு காலத்தில் எவ்வளவு சக்திவாய்ந்தவையாக இருந்தன என்பதையும், அவற்றைக் கேட்டு ஒரு பேரரசே அச்சத்தில் நடுங்கியது என்பதையும் நினைவுகூருமாறு நாட்டு மக்களை பாரதிய ஜனதா கட்சி கேட்டுக்கொள்கிறது.
அந்தச் சொற்கள் எதிர்ப்பிற்கான உணர்வை மக்களிடம் தட்டியெழுப்பியதால், ஆங்கிலேயர்கள் அவற்றை ஒடுக்க முயன்றனர். பல தலைமுறை இந்தியர்கள் அவற்றைச் சுதந்திரம், தியாகம் மற்றும் தேசியப் பெருமிதத்தின் மந்திரமாக ஏற்றுக்கொண்டனர். இந்த மரபை இன்றைய 'வாக்கு வங்கி' அரசியல் கணக்கீடுகளுக்குள் மட்டும் அடைத்துவிட முடியாது.
1947-ல் இந்தியாவின் சுதந்திர முழக்கமாக ‘வந்தே மாதரம்’ திகழ்ந்தது. அதேபோல, பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், 2047-ல் அமையவிருக்கும் 'வளர்ச்சியடைந்த இந்தியா'வுக்கான பிரம்மாண்டமான முழக்கமாகவும் ‘வந்தே மாதரம்’ அமையும்’ என்று அந்த தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.