

ஷிவ்மோகா எம்.பி பி.ஒய்.ராகவேந்திரா,
ஷிவ்மோகா: கர்நாடக மாநிலத்தில் குட்கா பொருள் மீதான விற்பனைக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை 24 மணி நேரத்தில் திரும்பப் பெற வேண்டும் என்று ஷிவ்மோகா மக்களவை தொகுதியின் உறுப்பினரும், அம்மாநில முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகனுமான பி.ஒய்.ராகவேந்திரா, மாநில அரசுக்கு கெடு விதித்துள்ளார்.
கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் அண்மையில் வெளியிட்ட ஆணையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: கர்நாடக மாநில பொதுமக்களின் நலன் கருதி, குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. புகையிலை, நிகோடின் கலந்த குட்கா, பான் மசாலா உள்ளிட்டவற்றுக்கு ஓராண்டுக்கு தடை விதிக்கப்படுகிறது.
இதை உற்பத்தி செய்வது, பதுக்கி வைப்பது, விநியோகிப்பது, விற்பனை செய்வது போன்றவை தடை செய்யப்படுகிறது. இவற்றை எந்தவொரு பெயரிலும் சந்தையில் விற்றாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்..
இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த பாஜக எம்.பி பி.ஒய்.ராகவேந்திரா கூறியதாவது, “அடுத்த 24 மணி நேரத்தில் மாநிலத்தில் குட்கா பொருள் மீதான விற்பனைக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை அரசு திரும்பப் பெற வேண்டும். இல்லையென்றால் காங்கிரஸ் அரசுக்கு எதிராக பாஜக போராட்டத்தில் இறங்கும்.
இந்த தடை உத்தரவு மாநிலத்தில் பாக்கு சாகுபடியில் ஈடுபட்டுள்ளவர்களை அதிகம் பாதிக்கும். அரசின் தடை உத்தரவு அமலுக்கு வந்த ஒரே நாளில் பாக்கு விலை சந்தையில் குறைந்தது குறிப்பிடத்தக்கது.
அரசின் இந்த தடை உத்தரவு மக்கள் நலன் சார்ந்து எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. மக்களின் ஆரோக்கியத்தின் மீது அரசுக்கு அக்கறை இருக்கிறது என்றால் சிகரெட் மற்றும் மதுபான விற்பனையை தடை செய்திருக்க வேண்டும்.
காங்கிரஸ் அரசு மாநிலத்தில் மதுபான விற்பனைக்கான உரிமத்தை அதிகரித்து, மதுபான கடைகளின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது. ஆட்சியாளர்கள் மதுபான விற்பனையை தடை செய்வார்களா?” என்றார்.