ஆஸி.யில் சதம் விளாசிய முதல் வங்கதேச வீரர்: தன்ஸித் ஹசன் தமீம் சாதனை

முதல் சதம் பதிவு செய்த தன்ஸித் ஹசன் தமீம்

முதல் சதம் பதிவு செய்த தன்ஸித் ஹசன் தமீம்

Updated on
2 min read

டார்வின்: ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட்டில் சதம் பதிவு செய்த முதல் வங்கதேச வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார் தன்ஸித் ஹசன் தமீம். அவர் 197 பந்துகளில் 101 ரன்கள் எடுத்திருந்தார்.

வங்கதேசத்துக்கு எதிரான முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் 198 ரன்களில் சுருண்டது ஆஸ்திரேலிய அணி. வங்கதேச வீரர் ஹசன் மஹ்மூத் அபாரமாக பந்துவீசி 6 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

வங்கதேச அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி டார்வினிலுள்ள மராரா மைதானத்தில் நேற்று தொடங்கியது. முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 53 ஓவர்களில் 198 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

தொடக்க ஆட்டக்காரர்களாக டிராவிஸ் ஹெட்டும், ஜேக் வெதரால்டும் களமிறங்கினர். இருவரும் நிதானமாக விளையாடினாலும் விரைவிலேயே ஆட்டமிழந்தனர். டிராவிஸ் ஹெட் 22 ரன்களிலும், ஜேக் வெதரால்டு 23 ரன்களிலும் ஹசன் மஹ்மூத் பந்தில் ஆட்டமிழந்து பெவிலியன் வந்தனர்.

இதைத் தொடர்ந்து களம்புகுந்த மார்னஸ் லபுஷேன் ஒரு ரன்னிலேயே ஆட்டமிழந்தார். கேமரூன் கிரீன் 13, அலெக்ஸ் கேரி 19 ரன்களிலும், பியூ வெப்ஸ்டர் 12 ரன்களிலும், பாட் கம்மின்ஸ் 9 ரன்களிலும், மிட்செல் ஸ்டார்க் 1 ரன்னிலும், நேதன் லயன் 7 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

ஒரு பக்கம் விக்கெட்கள் தொடர்ந்து விழுந்தாலும் மறுமுனையில் நிலைத்து நின்று விளையாடி அரை சதம் விளாசினார் அனுபவ வீரர் ஸ்டீவன் ஸ்மித். அவர் 109 பந்துகளில் 71 ரன்கள் (7 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர்) குவித்து ஆட்டமிழந்தார். தனது வேகப்பந்து வீச்சால் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களை மட்டுமல்லாமல் நடுவரிசை வீரர்களையும் வீழ்த்தி ஆட்டம் காண வைத்தார் மஹ்மூத்.

அவர் 17 ஓவர்கள் பந்துவீசி 55 ரன்களை விட்டுக்கொடுத்து 6 முக்கிய விக்கெட்களைக் கைப்பற்றினார். டஸ்கின் அகமது, எபடாட் ஹொசைன் ஆகியோர் தலா 2 விக்கெட்களைச் சாய்த்தனர்.

பின்னர் வங்கதேச அணி தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியது. ஷதமன் இஸ்லாமும், தன்ஸித் ஹசன் தமீமும் களமிறங்கினர். அதிரடியாக விளையாட முற்பட்ட ஷதமன் இஸ்லாம் 30 பந்துகளில் 20 ரன்கள் சேர்த்து மிட்செல் ஸ்டார்க் பந்தில் நேதன் லயனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

இதைத் தொடர்ந்து தன்ஸித் ஹசன் தமீமுடன் ஜோடி சேர்ந்த மோமினுல் ஹக் நிதானமாக விளையாடி ரன்கள் சேர்த்தார். ஆட்ட நேர இறுதியில் வங்கதேச அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 96 ரன்கள் எடுத்தது. தமீம் 32 ரன்களும், மோமினுல் ஹக் 35 ரன்களும் சேர்த்து களத்தில் இருந்தனர்.

102 ரன்கள் பின்தங்கிய நிலையில் வங்கதேச அணி தனது முதல் இன்னிங்ஸை இன்று தொடர்ந்தது. மோமினுல் ஹக் 49 ரன்கள் எடுத்த நிலையில் ஹேசில்வுட் பந்தில் அலெக்ஸ் கேரியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து களத்துக்கு வந்த வங்கதேச கேப்டன் நஜ்முல் ஹுசைன் ஷேண்டோவுடன் இணைந்து 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார் தன்ஸித். அவர் 101 ரன்கள் எடுத்து லயன் பந்தில் ஆட்டமிழந்தார்.

இரண்டாம் நாள் தேநீர் இடைவேளையின் போது 3 விக்கெட் இழப்புக்கு 286 ரன்கள் எடுத்திருந்தது வங்கதேசம். ஷேண்டோ 79, முஷிபிஹிர் ரஹீம் 26 ரன்கள் எடுத்திருந்தனர். வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 90+ ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

முத்தான முதல் சதம்

25 வயது இளம் வீரரான தன்ஸித் ஹசன் தமீமுக்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவே முதல் சதம். வங்கதேச அணிக்காக அயலக டெஸ்ட் போட்டியில் சதம் பதிவு செய்த இரண்டாவது வீரர், ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் கிரிக்கெட்டில் சதம் பதிவு செய்த முதல் வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

<div class="paragraphs"><p>முதல் சதம் பதிவு செய்த தன்ஸித் ஹசன் தமீம்</p></div>
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டத் திருவிழா கோலாகலம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in