

பெங்களூரு: பெங்களூரு மெட்ரோ ரயில் கட்டண உயர்வுக்கு எதிராக போராட்டம் நடத்த முயன்ற பாரதிய ஜனதா கட்சி எம்.பி. தேஜஸ்வி சூர்யா, இன்று (பிப்ரவரி 9) ஜெயநகர் மெட்ரோ நிலையம் அருகே கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்.
மெட்ரோ கட்டண உயர்வுக்கு எதிராக போராடியதால் கைது செய்யப்பட்டு, விடுதலையான பிறகு தேஜஸ்வி சூர்யா வெளியிட்ட எக்ஸ் பதிவில், “என்னை கைது செய்வதால், என்னை அமைதியாக்கிவிட முடியாது. இது ஒரு 'காலிப்பெட்டி' அரசாங்கம் என்ற உண்மையை அம்பலப்படுத்தியதற்காக காங்கிரஸ் அரசாங்கம் என்னை கைது செய்தது வெட்கக்கேடானது. கர்நாடகாவின் நிதிநிலை சீர்குலைந்துள்ளது. உயர்ந்து வரும் மெட்ரோ கட்டணங்கள் மற்றும் விண்ணை முட்டும் செலவுகள் காரணமாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இனி சாக்குப்போக்குகள் வேண்டாம்.
முதல்வர் சித்தராமையா பட்ஜெட்டில் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையை சமர்ப்பித்து எங்கள் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும். நிதி ஆணையத்திடம் நீங்கள் ஒப்புக்கொண்டது போல, மாநிலத்தின் நிதிநிலை ஏன் பலவீனமாக உள்ளது?. கர்நாடகாவில் வாழ்வது ஏன் அதிக செலவு உடையதாக உள்ளது?. மாநிலம் ஏன் ஒவ்வொரு நாளும் விலைகளை உயர்த்துகிறது?. நிதிநிலையை சரிசெய்யுங்கள், மெட்ரோவுக்கு நிதியுதவியை மீட்டெடுங்கள், அப்போது மெட்ரோ கட்டணங்கள் குறையும். இதைத் தவிர வேறு எதுவும் ஏமாற்றுவேலைதான்” என்று கூறினார்.
முன் அறிவிப்பு இன்றி மெட்ரோ நிலையத்தில் போராட்டம் நடத்தியதற்காக தேஜஸ்வி சூர்யாவுக்கு பிப்ரவரி 8 அன்று காவல்துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது. மெட்ரோ கட்டண உயர்வுக்கு காங்கிரஸ் தலைமையிலான கர்நாடக அரசாங்கமும், மத்திய அரசும் மாறி மாறி ஒருவரையொருவர் குற்றம் சாட்டி வரும் நிலையில், இந்த சம்பவம் பரபரப்பை உருவாக்கியது.
அதே நேரத்தில், இந்த விவகாரத்தை அரசியலாக்குவதற்காக பாஜகவை கர்நாடக சுகாதாரத் துறை அமைச்சர் தினேஷ் குண்டு ராவ் கடுமையாகச் சாடினார். அவர், “பாஜக-வினர் எல்லாவற்றிலும் அரசியல் செய்ய விரும்புகிறார்கள். மெட்ரோ ரயில் சேவை மாநில மற்றும் மத்திய அரசுகளால் நடத்தப்படுகிறது. கட்டணத்தை உயர்த்த வேண்டாம் என்று முதல்வர் ஏற்கனவே இந்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். இப்போது தேஜஸ்வி சூர்யா, கட்டணத்தை உயர்த்தப் போவதில்லை என்று கூறுகிறார்." என்று தெரிவித்தார்.
முன்னதாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை), பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (BMRCL), இன்று (பிப்ரவரி 9) முதல் நடைமுறைக்கு வரவிருந்த வருடாந்திர கட்டணத் திருத்தத்தை மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைத்துள்ளதாகத் தெரிவித்தது. திருத்தப்பட்ட கட்டணங்கள் குறித்த முடிவு அதன் வாரியத்தால் எடுக்கப்பட்டு, மதிப்பாய்வுக்குப் பிறகு அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளது