

பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள மல்லேஸ்வரம் தொகுதி பாஜக எம்எல்ஏ சுரேஷ் குமார். 70 வயதான இவர் எளிமையானவர். சுறுசுறுப்பாக செயல்படுபவர், அனைத்து தரப்பினரிடம் நட்பு பாராட்டுவார். அண்மையில் பெங்களூரு போக்குவரத்து போலீஸாருடன் இணைந்து ஒரு வாரம் சாலை விதிமுறைகள் விழிப்புணர்வுக்கு தன்னார்வலராக பணியாற்றினார்.
இந்நிலையில், சுரேஷ்குமார் கடந்த டிசம்பர் 23-ம் தேதி மல்லேஸ்வரத்தில் இருந்து சைக்கிள் கிளப் உறுப்பினர்கள் 12 பேருடன் கன்னியாகுமரிக்கு புறப்பட்டார். தினமும் 12 முதல் 15 மணி நேரம் சைக்கிள் ஓட்டினார். இதன் மூலம் நாளொன்றுக்கு சராசரியாக 130 முதல் 155 கி.மீ. தூரத்தை கடந்தார். 5-வது நாளின் முடிவில் 702 கி.மீ. தூரம் பயணித்து கன்னியாகுமரியை வெற்றிகரமாக அடைந்தார்.
இதுகுறித்து பிரதமர் மோடி தனது சமூகவலைதள பக்கத்தில், ‘‘பாஜக எம்எல்ஏ சுரேஷ்குமார் 5 நாட்களில் 702 கி.மீ. தூரம் சைக்கிளில் பயணித்திருப்பது சாதனை முயற்சி. அவரது இந்த முயற்சிக்கு எனது பாராட்டுகள். அவரது வயதை கடந்து உற்சாகமாக, நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதை காட்டுகிறது. அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பாராட்டினேன்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.