உத்தர பிரதேசத்தில் 2014-ம் ஆண்டுக்கு பின் முதல் முறையாக பாஜக இப்தார் நிகழ்ச்சி
புதுடெல்லி: உத்தர பிரதேச மாநில பாஜக சிறுபான்மை மோர்ச்சா தலைவராக குன்வர் பாசித் அலி பதவி வகிக்கிறார். இவர் நேற்று முன்தினம் மாலை மீரட்டில் பாஜக சார்பில் இப்தார் நோன்பு விருந்து அளித்தார்.
இது கடந்த 2014-ம் ஆண்டு பாஜக அரசின் முதல்வராக யோகி ஆதித்யநாத் பதவியேற்ற பிறகு உ.பி.யில் பாஜக சார்பில் நடத்தும் முதல் இப்தார் நோன்பு விருந்தாகும். இந்த நிகழ்ச்சி தலைநகர் லக்னோவுக்குப் பதில் மேற்கு உ.பி.யில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் மீரட்டில் நடந்தது.
இந்த விருந்தில் பாஜக முக்கிய தலைவர்கள் மற்றும் ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர். உ.பி. பாஜக சிறுபான்மை நலன், முஸ்லிம் வக்பு மற்றும் ஹஜ் துறைகளின் அமைச்சர் டேனிஷ் ஆசாத் அன்சாரி, மாநிலங்களவை எம்.பி.க்களில் பாஜக தேசிய பொதுச் செயலாளர் துஷ்யந்த் குமார் கவுதம் மற்றும் குலாம் அலி கட்டானா, பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் சையத் ஜாபர் ஆலம், முன்னாள் எம்எல்ஏ சத்யவீர் தியாகி, தேவேந்திர குர்ஜார், கவுஷல் சவுகான் ஆகியோர் கலந்து கொண்டனர்.
உ.பி.யில் அடுத்த ஆண்டு வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற முஸ்லிம் வாக்குகளைக் குறிவைத்து சமாஜ்வாதி, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் ஆகிய எதிர்க்கட்சிகள் களம் இறங்கியுள்ளன. இந்த முறை பாஜகவும் முஸ்லிம்களின் வாக்குகளைக் குறி வைத்து இப்தார் விருந்து நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் அலிகர், ஆக்ரா உள்ளிட்ட சில நகரங்களிலும் இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்த பாஜக சிறுபான்மைப் பிரிவு சார்பில் திட்டமிடப்படுகிறது.
2024 மக்களவை தேர்தலில் பாஜகவின் உ.பி. தொகுதிகள் வெறும் 33 ஆகக் குறைந்தது. இதனால்தான் முஸ்லிம்கள் இடையே தனது செல்வாக்கை நிலைநாட்டவும், அவர்களுடன் நேரடித் தொடர்பு கொள்ளவும் பாஜக இந்த நோன்பு இப்தாரை ஏற்பாடு செய்துள்ளது.
