

திருவனந்தபுரம்: கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரம் மேயராக பாஜக.வைச் சேர்ந்த வி.வி.ராஜேஷ் நேற்று பதவியேற்றார்.
கேரளாவில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக கணிசமான இடங்களில் வெற்றி பெற்றது. தலைநகர் திருவனந்தபுரம் மாநகராட்சியில் மொத்தம் உள்ள 101 வார்டுகளில் பாஜக 50 இடங்களை கைப்பற்றியது. மார்க்சிஸ்ட் கூட்டணிக்கு 29, காங்கிரஸ் கூட்டணிக்கு 19 வார்டுகள் கிடைத்தன. 2 வார்டுகளில் சுயேச்சைகள் வெற்றி பெற்று உள்ளனர்.
கடந்த 45 ஆண்டுகளாக திருவனந்தபுரம் மாநகராட்சி மார்க்சிஸ்ட் கூட்டணியின் கோட்டையாக இருந்தது. முதல் முறையாக இந்த மாநகராட்சியை பாஜக கைப்பற்றி புதிய வரலாறு படைத்திருக்கிறது.
இந்நிலையில், புதிய மேயரை தேர்வு செய்வதற்கான வாக்குப் பதிவு நேற்று நடைபெற்றது. இதில் பாஜக.வின் 45 வயதான வி.வி.ராஜேஷ் 51 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவருக்கு சுயேச்சை உறுப்பினர் பி.ராதா கிருஷ்ணன் ஆதரவளித்தார். சுயேச்சை உறுப்பினர் ஒருவர் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. இதையடுத்து நேற்று ராஜேஷ் பதவியேற்றுக் கொண்டார்.
பதவியேற்ற பிறகு அவர் முதல் முறையாக கூறும்போது, ‘‘நாம் அனைவரும் ஒன்றிணைந்து முன்னேறுவோம். எல்லோரையும் இணைத்துக் கொண்டு பயணிப்போம். திருவனந்தபுரத்தின் 101 வார்டுகளிலும் வளர்ச்சியைக் கொண்டு வருவோம். முன்னேறிய நகரமாக திருவனந்தபுரத்தை மாற்றி அமைப்போம்’’ என்றார்.
கேரள மாநிலத்தில் பாஜக காலூன்ற முடியாமல் தவித்து வருகிறது. கடந்த 2016-ம் ஆண்டு நேமம் சட்டப்பேரவைத் தொகுதியில் பாஜக வேட்பாளர் ஓ.ராஜகோபால் வெற்றி பெற்று எம்எல்ஏ.வானார். கடந்த 2024-ம் ஆண்டு மக்களவை தேர்தலில் திருச்சூர் தொகுதியில் நடிகர் சுரேஷ் கோபி பாஜக சார்பில் போட்டியிட்டு எம்.பி.யானார். இவர்களை தவிர வேறு யாரும் இதுவரை சட்டப்பேரவை அல்லது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்படவில்லை.
இந்நிலையில், கேரள உள்ளாட்சித் தேர்தலில் கணிசமான இடங்களில் வெற்றி பெற்று பாஜக முன்னேற்றம் கண்டுள்ளது. இந்த வெற்றி அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் பலனளிக்கும் என்று பாஜக.வினர் உற்சாகத்தில் உள்ளனர்.