அசாமில் தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சியை கைப்பற்றிய பாஜக - காங்கிரஸுக்கு கடும் சரிவு

அசாம் தேர்தல் வெற்றியை தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் இணைந்து கொண்டாடிய ஹிமந்த பிஸ்வா சர்மா

அசாம் தேர்தல் வெற்றியை தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் இணைந்து கொண்டாடிய ஹிமந்த பிஸ்வா சர்மா

Updated on
2 min read

குவஹாட்டி: அசாம் சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 126 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக் கூட்டணி 90-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற உள்ளதால், அக்கூட்டணி மூன்றாவது முறையாக ஆட்சியை கைப்பற்றியுள்ளது.

அசாம் சட்டப்பேரவையின் மொத்தமுள்ள 126 தொகுதிகளுக்கு கடந்த 9ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதில், 85.96% வாக்குகள் பதிவாகின. வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வருகிறது. மாலை நிலவரப்படி தேசிய ஜனநாயகக் கூட்டணி 90 இடங்களில் வெற்றி பெற்று, 2 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. ஆட்சி அமைக்க 64 தொகுதிகள் தேவை எனும் நிலையில், 90க்கும் அதிகமான இடங்களில் வெற்றியை வசப்படுத்த உள்ளதால், தேசிய ஜனநாயகக் கூட்டணி தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த தேர்தலில் பாஜக 81 தொகுதிகளில் வெற்றி பெற்று, 1 தொகுதியில் முன்னிலை வகித்து வருகிறது. முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா ஜலுக்பாரி தொகுதியில் ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 186 வாக்குகள் பெற்று தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரை 80 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

பாஜகவின் கூட்டணி கட்சியான அசாம் கன பரிஷத் 10 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. மற்றொரு கூட்டணி கட்சியான போடோலாந்து மக்கள் முன்னணியும் 10 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பாஜக 38 சதவீதத்துக்கும் அதிக வாக்குகளைப் பெற்றுள்ளது. அசாம் கன பரிஷத் 6.42 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது. போடோலாந்து மக்கள் முன்னணி 3.75 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது.

காங்கிரஸ் கட்சி 15 தொகுதிகளில் வெற்றியும், 4 தொகுதிகளில் முன்னிலையும் வகித்து வருகிறது. ஜோர்ஹட் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் முதல்வர் முகமான கவுரவ் கோகாய் பாஜகவின் ஹிதேந்திரா நாத் கோஸ்வாமியிடம் 23,182 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இது அக்கட்சியினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

சுதந்திர இந்தியாவில் சுமார் 50 ஆண்டுகள் அசாமை ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சி, தொடர்ந்து மூன்றாவது முறையாக பாஜகவிடம் தோல்வியடைந்துள்ளது. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி அசாமில் 61 சதவீதம் இந்துக்களும் 34 சதவீதம் முஸ்லிம்களும் உள்ளனர். முஸ்லிம்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலானவர்கள் வங்கதேசத்தில் இருந்து வந்தவர்கள் என்ற வாதத்தை தொடர்ந்து முன்னெடுத்து வரும் பாஜக, ஊடுருவல்காரர்களை முழுமையாக திருப்பி அனுப்ப பாஜக மீண்டும் ஆட்சிக்கு வருவது அவசியம் என பிரச்சாரம் செய்தது. மேலும், கவுரவ் கோகாயின் மனைவிக்கு பாகிஸ்தான் நாட்டுடன் தொடர்பு இருப்பதாகவும் பாஜக பிரச்சாரம் செய்தது.

பாஜகவின் இத்தகைய பிரச்சாரம் காரணமாக காங்கிரஸ் கட்சி, இஸ்லாமிய ஆதரவு நிலைப்பாடு கொண்ட கட்சி என்ற பிம்பம் உருவானது. வங்கதேசத்தை ஒட்டிய மாநிலம் என்பதால், இந்து - முஸ்லிம் விவகாரம் அசாம் தேர்தலில் முக்கிய பங்கு வகித்தது என்றே சொல்ல வேண்டும். இது மக்களிடையே குறிப்பாக இந்துக்களிடையே மத ரீதியான சிந்தனையை வலுப்படுத்தி, அவர்கள் பாஜக ஆதரவு நிலைப்பாட்டை எடுக்க வழிவகுத்தது. கடந்த முறையைவிட அதிக வெற்றியை பாஜகவுக்கு தேடித்தந்துள்ள ஹிமந்த பிஸ்வா சர்மா மீண்டும் முதல்வராக பொறுப்பேற்றார் என எதிர்பார்க்கப்படுகிறது.

<div class="paragraphs"><p>அசாம் தேர்தல் வெற்றியை தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் இணைந்து கொண்டாடிய ஹிமந்த பிஸ்வா சர்மா</p></div>
கேரளாவில் ஆட்சியை கைப்பற்றியது காங்கிரஸ் கூட்டணி - இடதுசாரிகளுக்கு படுதோல்வி!

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in