பஞ்சாப் பேரவைத் தேர்தலில் பாஜக - சிரோமணி அகாலி தளம் கூட்டணி

பஞ்சாப் பேரவைத் தேர்தலில் பாஜக - சிரோமணி அகாலி தளம் கூட்டணி
Updated on: 
2 min read

புதுடெல்லி: பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளதாக பாஜகவும், சிரோமணி அகாலி தளமும் கூட்டாக அறிவித்துள்ளன. இதன்மூலம், சிரோமணி அகாலி தளம் மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்துள்ளது.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொடர்ந்து 24 ஆண்டுகள் நீடித்திருந்த சிரோமணி அகாலி தளம், கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் கூட்டணியில் இருந்து விலகியது. மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சி இந்த முடிவை எடுத்தது.

அந்த மூன்று சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற்றதை அடுத்து, இரு கட்சிகளும் மீண்டும் இணைவதற்கான வாய்ப்பு குறித்து பரவலாகப் பேசப்பட்டது.

அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இவ்விரு கட்சிகளும் தற்போது கூட்டணியை உறுதிப்படுத்தி உள்ளன.

முன்னதாக, டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்துக்கு வருகை தந்த சிரோமணி அகாலி தளம் கட்சியின் தலைவர் சுக்பிர் சிங் பாதலை, பாஜக தேசியத் தலைவர் நிதின் நவீன் வரவேற்றார். அப்போது, பாஜக மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷாவும் உடன் இருந்தார்.

இந்தச் சந்திப்பை அடுத்து, இருதரப்பும் பாஜக தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் பேசினர். அப்போது கூட்டணி குறித்த அறிவிப்பை வெளியிட்ட அமித் ஷா, “வர உள்ள பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவும், சிரோமணி அகாலி தளமும் கூட்டணியாகப் போட்டியிடும். இன்று குரு புரப் நன்னாள். இந்த நன்னாளில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மூத்த கூட்டாளியாக இருந்த சிரோமணி அகாலி தளம், மீண்டும் நம்முடன் இணைந்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி, சுக்பிர் சிங் பாதல், அடல் பிஹாரி வாஜ்பாய், எல்.கே.அத்வானி ஆகியோருக்கு இடையே பல ஆண்டுகளாக ஆழமான பிணைப்பு உள்ளது. அதேபோல, பாஜகவுக்கும், அகாலி தளத்துக்கும் இடையிலும் மிக நெருக்கமான உறவு உள்ளது.” என தெரிவித்தார்.

கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார் என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அமித் ஷா, “இந்த கூட்டணியில் மூத்த சகோதரர் பாத்திரத்தை சிரோமணி அகாலி தளம் வகிக்கும். எனவே, மூத்த சகோதரர் தரப்பில் இருந்தே முதல்வர் வேட்பாளர் முன்னிறுத்தப்படுவார்.

இந்து - சீக்கிய சகோதரத்துவத்தின் அடையாளமாக இந்த கூட்டணி திகழும். இந்த கூட்டணி மூன்று முக்கிய நோக்கங்களைக் கொண்டுள்ளது. ஒன்று, பஞ்சாபில் இருந்து போதைப் பொருள் பயன்பாடு மற்றும் போதை அடிமைத்தனத்தை ஒழிப்பது, இரண்டு, ஊழலை வேரறுப்பது, மூன்று, மாநிலத்தில் தேசியவாத சக்திகளை வலுப்படுத்துவது.

தற்போதைய பஞ்சாப் அரசு, மூன்று மாதங்களுக்கும் போதைப்பொருள் பிரச்சினையை ஒழிப்பதாக வாக்குறுதி அளித்தது. ஆனால், அது நடக்கவில்லை. மாறாக, போதை அடிமைத்தன சம்பவங்கள் அதிகரித்துள்ளன. எங்கள் கூட்டணி ஆட்சிக்கு வந்தால், 2029-ம் ஆண்டு டிசம்பர் 31-க்குள் போதைப்பொருள் பிரச்சினையில் இருந்து பஞ்சாப் முழுமையாக விடுபடும்.” என தெரிவித்தார்.

என்டிஏ கூட்டணியில் மீண்டும் இணைந்தது குறித்து பேசிய சுக்பீர் சிங் பாதல், “இது வெறும் அரசியல் கூட்டணி மட்டுமல்ல. இதற்கொரு உணர்வுப்பூர்வமான பிணைப்பு உண்டு. பாஜக - அகாலி தளம் இடையிலான உறவு பிரிக்க முடியாத, ஆழமான பிணைப்பு கொண்டது என எனது மறைந்த தந்தை பிரகாஷ் சிங் பாதல் அடிக்கடி கூறுவார். இது பஞ்சாபின் நலனுக்காகவும், சீக்கிய சமூகத்தின் நலனுக்காகவும் அமைக்கப்பட்ட கூட்டணி.

இந்த கூட்டணி எவ்வளவு நீண்ட காலம் நீடித்தது என்பதையும் இதன்மூலம் எத்தனை அரசாங்கங்கள் அமைக்கப்பட்டன என்பதையும் நீங்கள் பார்த்திருப்பீர்கள்” என தெரிவித்தார்.

பஞ்சாப் பேரவைத் தேர்தலில் பாஜக - சிரோமணி அகாலி தளம் கூட்டணி
சோனியாவுக்கு சாவர்க்கர் பேரன் நோட்டீஸ்: புத்தகத்தில் இடம்பெற்ற கருத்துக்கு எதிர்ப்பு

X