

புதுடெல்லி: வழக்கத்தில் இல்லாத 71 சட்டங்களை ரத்து செய்வது அல்லது திருத்துவது தொடர்பான மசோதா நாடாளுமன்றத்தில் நேற்று நிறைவேறியது.
நாடாளுமன்ற மக்களவையில் ரத்து மற்றும் திருத்த மசோதா 2025 கடந்த திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. வழக்கத்தில் இல்லாத அல்லது காலாவதியான 71 சட்டங்களை ரத்து செய்ய அல்லது திருத்தம் செய்ய இது வகை செய்கிறது.
குறிப்பாக, இந்திய டிராம்வேஸ் சட்டம் 1986, சர்க்கரை விலை சமநிலைப்படுத்தல் நிதி சட்டம் 1976, பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் சட்டம் 1988 உள்ளிட்டவற்றை ரத்து செய்ய இந்த மசோதா வகை செய்கிறது.
இந்த மசோதா விவாதத்துக்குப் பிறகு மக்களவையில் நேற்று முன்தினம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் இந்த மசோதா மாநிலங்களவையில் நேற்று நிறைவேறியது.
காப்பீடு மசோதா: காப்பீட்டுத் துறையில் 74 சதவீதமாக உள்ள அந்நிய நேரடி முதலீட்டை 100% ஆக அதிகரிக்க வகை செய்யும் சப்கா பீமா சப்கி ரக்சா (காப்பீட்டுச் சட்டங்கள் திருத்தம்) மசோதா 2025, மக்களவையில் நேற்று முன்தினம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், இந்த மசோதா மாநிலங்களவையில் நேற்று குரல் வாக்கு மூலம் நிறைவேறியது. இதையடுத்து இந்த மசோதா குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.