

புதுடெல்லி: பிஹார் மாநில போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் நபின், பாஜக தேசிய செயல் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பாஜக தேசியத் தலைவராக கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரியில் ஜே.பி.நட்டா பொறுப்பேற்றார். அவரது 3 ஆண்டு பதவிக் காலம் ஏற்கெனவே முடிந்துவிட்டது. எனினும், 2024 மக்களவைத் தேர்தல் உள்ளிட்ட காரணங்களால் அவரது பதவிக் காலம் பலமுறை நீட்டிக்கப்பட்டது. தற்போது மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக நட்டா பதவி வகிக்கிறார்.
இதற்கிடையே, பாஜகவுக்கு புதிய தேசியத் தலைவரை நியமிக்க, கட்சி மேலிடத்தில் தொடர்ந்து ஆலோசனை நடந்து வந்தது. இதுதொடர்பாக கட்சி நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி, அமைச்சர் அமித் ஷா, நட்டா தொடர்ந்து ஆலோசனை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், பிஹார் மாநில போக்குவரத்து துறை அமைச்சராக உள்ள நிதின் நபின், பாஜகவின் தேசிய செயல் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமன அறிவிப்பு உடனடியாக அமலுக்கு வருவதாக பாஜக தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங் நேற்று தெரிவித்துள்ளார்.
பிஹாரில் பாஜக மூத்த தலைவர் மறைந்த நபின் கிஷோர் பிரசாத் சின்ஹாவின் மகன்தான் நிதின் நபின். தந்தையின் மறைவுக்குப் பிறகு, அரசியலில் தீவிரமாக இறங்கினார். பிஹார் தலைநகர் பாட்னாவில் உள்ள பாங்கிபூர் சட்டப்பேரவை தொகுதியில் வெற்றி பெற்று எம்எல்ஏவாகி இருக்கிறார்.
பிஹாரில் கடந்த 2006-ம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் முதல்முறையாக நபின் வெற்றி பெற்றார். அதன்பிறகு 2010, 2015, 2020 மற்றும் 2025 சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் நபின் வெற்றி பெற்றுள்ளார். தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு, நிதின் நபின் வழிகாட்டுதலின்படி தேர்தல் பணிகளில் பாஜக ஈடுபடும்என்று கட்சி வட்டாரம் தெரிவித்துள்ளது.