பிஹார்: நகைக்கடையில் துப்பாக்கி முனையில் பல கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் கொள்ளை

பிஹார்: நகைக்கடையில் துப்பாக்கி முனையில் பல கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் கொள்ளை
Updated on: 
1 min read

புதுடெல்லி: பிஹாரில் நகைக்கடை ஒன்றில் பட்டப்பகலில் ஊழியர்களை துப்பாக்கி முனையில் சிறைப்பிடித்த 8 பேர் கொண்ட கும்பல், கடையிலிருந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்தது.

பிஹாரின் பேட்டியாவில் உள்ளது ‘சென்கோ கோல்டு அண்ட் டைமண்ட்’ எனும் நகைக்கடை. இது, காலிபாக் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சுப்ரியா சினிமா சாலையில் அமைந்துள்ளது.

இதனுள் நேற்று பட்டப்பகலில் ஆயுதங்கள் ஏந்திய கும்பல் நுழைந்தது. அதில் ஆறு முதல் எட்டு பேர் கொண்ட கும்பல், அங்கு பணிபுரிந்த ஊழியர்களைத் துப்பாக்கி முனையில் சிறைபிடித்தனர்.

பின்னர் அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த, தங்கம், வெள்ளி நகைகள் மற்றும் பணத்தைக் கொள்ளையடித்தனர். திடீரென நடந்த இந்தத் தாக்குதலால் ஊழியர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

கொள்ளைச் சம்பவத்தை ஊழியர் ஒருவர் தடுக்க முயன்றபோது, அவரைத் துப்பாக்கியின் பின்புறக் பிடிக்கட்டையால் தாக்கியுள்ளனர். ஊழியர்களை மிரட்டித் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து கொள்ளையைத் தொடங்கியது.

முதற்கட்டத் தகவல்களின்படி, கொள்ளையர்கள் தங்கம், வைரம் மற்றும் வெள்ளி நகைகளையும், பணத்தையும் எடுத்துச் சென்றுள்ளனர். கடையில் இருந்த பெரும்பாலான நகைகளும் பணமும் கொள்ளையடிக்கப்பட்டதாக ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களின் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. கொள்ளையை முடித்துவிட்டு, அந்தக் கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது.

இந்த கொள்ளையின் போது கடையில் இருந்த சிசிடிவியைப் பற்றியும் கொள்ளையர்காள் கவலைப்படவில்லை. அவர்களில் எவருமே தம் முகங்களையும் மறைக்கவில்லை.

இந்தக் காட்சிகள் அனைத்தும் கடையின் சிசிடிவியில் தெளிவாகப் பதிவாகி உள்ளது. மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில், பட்டப்பகலில் நடந்த இந்த மிகப்பெரிய கொள்ளைச் சம்பவம் காவல்துறையினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பல வருடங்களுக்கு பின் பட்டப்பகலில் நடைபெற்ற இந்த கொள்ளைச் சம்பவம், பிஹாரின் காவல்துறைக்கு பெரும் சவாலாகி விட்டது. இந்தப் பெரும் கொள்ளை குறித்துத் தகவல் அறிந்ததும், சம்பாரன் மண்டல டிஐஜி ஹர் கிஷோர் ராய் மற்றும் எஸ்எஸ்பி குமார் கௌதம் ஆகியோர், பலத்த காவல்துறைப் படையுடன் சம்பவ இடத்திற்கு வந்தனர். அதிகாரிகள் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு, ஊழியர்களிடம் விசாரணை நடத்தி முழு விவரங்களையும் சேகரித்தனர். குற்றவாளிகளை அடையாளாம் காணவும், தப்பிச் சென்ற பாதையைக் கண்டறியவும், கடையிலும் வெளியிலும் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை காவல்துறை ஆய்வு செய்து வருகிறது.

குற்றவாளிகள் நகைக்கடையை அடைவதற்கு எந்தப் பாதையைப் பயன்படுத்தினார்கள் என்பதையும், குற்றத்தைச் செய்த பிறகு எந்தத் திசையில் தப்பிச் சென்றார்கள் என்பதையும் கண்டறிய காவல்துறை முயற்சி மேற்கொண்டு வருகிறது.

இந்தச் சம்பவத்தின் அனைத்து அம்சங்களும் தற்போது விசாரணையில் உள்ளன; குற்றவாளிகளைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கொள்ளையர்கள் தம் முகத்தை மறைக்காமலேயே பகல் வெளிச்சத்தில் நகைக்கடைக்குள் நுழைந்து, கொள்ளையடித்திருப்பது எதிர்கட்சிகளால் கடுமையாக விமர்சிக்கப்படுகிறது.

பிஹார்: நகைக்கடையில் துப்பாக்கி முனையில் பல கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் கொள்ளை
குறையும் தங்கம் விலையும், முதலீட்டு யோசனைகளும் - ஒரு தெளிவுப் பார்வை

X