

பாட்னா: பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் பிஹார் முதல்வராக நிதிஷ் குமார் நேற்று பதவியேற்றார். 2 துணை முதல்வர்கள் உட்பட 26 அமைச்சர்களும் பதவியேற்றனர்.
கடந்த 6, 11 தேதிகளில் பிஹார் தேர்தல் நடைபெற்றது. கடந்த 14ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டன. பிஹாரில் மொத்தமுள்ள 243 தொகுதிகளில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி 202 தொகுதிகளைக் கைப்பற்றி அபார வெற்றி பெற்றது. இந்த கூட்டணியில் பாஜக 89, ஐக்கிய ஜனதா தளம் 85 இடங்களைக் கைப்பற்றின.
ஏற்கெனவே திட்டமிட்டபடி பிஹார் தலைநகர் பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் நேற்று காலை பதவியேற்பு விழா நடைபெற்றது. அப்போது பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் புதிய அரசு பதவியேற்றது. 10-வது முறையாக நிதிஷ் குமார் முதல்வராக பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் ஆரிப் முகமது கான் பதவிப் பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
பாஜக மூத்த தலைவர் சாம்ராட் சவுத்ரி, விஜய் குமார் சின்ஹா ஆகியோர் துணை முதல்வர்களாக பதவியேற்றுக் கொண்டனர். கடந்த முறையும் இருவரும் துணை முதல்வர்களாக பதவி வகித்தனர். விழாவில் துணை முதல்வர்கள் உட்பட 26 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.
பாஜகவில் இருந்து 14 பேர், ஐக்கிய ஜனதா தளத்தில் இருந்து 8 பேர், ராஷ்டிரிய லோக் சக்தி (ராம்விலாஸ்) கட்சியில் இருந்து 2 பேர், இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா, ராஷ்டிரிய லோக் மோர்ச்சாவில் இருந்து தலா ஒருவர் அமைச்சர்களாகி உள்ளனர்.
ஐக்கிய ஜனதா தள மூத்த தலைவர் ஜமா கான் மீண்டும் அமைச்சராகி உள்ளார். உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத், மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனி, அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் சர்மா,
ஒடிசா முதல்வர் மோகன் சரண் மாஜி, உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, நாகாலாந்து முதல்வர் நெய்பியூ ரியோ, சிக்கிம் முதல்வர் பிரேம் சிங் தாமங், மேகாலயா முதல்வர் கான்ராட் கே சங்மா உட்பட 20 மாநிலங்களின் முதல்வர்கள் விழாவில் பங்கேற்றனர்.
மேலும் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், மகாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, உபி துணை முதல்வர் பிரதேஷ் பதக், குஜராத் துணை முதல்வர் ஹர்ஷ் சிங்வி, உள்ளிட்டோர் பங்கேற்றனர். மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், ஜே.பி.நட்டா, அர்ஜுன் ராம் மேக்வால், கிரி ராஜ் சிங், சிராக் பாஸ்வான் உள்ளிட்டோரும் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டனர்.
பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “பிஹார் முதல்வராக பதவியேற்ற நிதிஷ் குமாருக்கு வாழ்த்துகள். அவர் மிகச் சிறந்த நிர்வாகி. அவரது ஆட்சிக் காலம் நல்லாட்சிக்கு அத்தாட்சி ஆகும்" என்று தெரிவித்துள்ளார்.