

பாட்னா: பிஹார் மாநில அரசு விழாவில் இஸ்லாமிய பெண் ஒருவர் அணிந்திருந்த ஹிஜாபை அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் விலக்க முயன்றார். அந்த வீடியோ காட்சியை பகிர்ந்த ஆர்ஜேடி, ‘சங்கி’ என நிதிஷ் குமாரை விமர்சித்துள்ளது.
அண்மையில் நடந்து முடிந்த பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக மற்றும் ஐக்கிய ஜனதா தளம் அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இதையடுத்து மீண்டும் பிஹார் முதல்வராக நிதிஷ் குமார் பொறுப்பேற்றார்.
இந்நிலையில், ஆயுஷ் மருத்துவர்களுக்கு பணி ஆணை வழங்கும் நிகழ்வில் இஸ்லாமிய பெண் ஒருவர் ஹிஜாப் அணிந்து கொண்டு, தனது பணி ஆணையை பெற வந்தார். அப்போது அந்த பெண்ணின் ஹிஜாபை நிதிஷ் குமார் சுட்டிக்காட்டினார். தொடர்ந்து ஹிஜாபை அவர் விலக்க முயன்றார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது.
இந்த சம்பவத்தின் போது நிதிஷ் குமாருடன் இருந்த பிஹார் துணை முதல்வர் சம்ரத் சவுத்ரி, நிதிஷை தடுக்க முயன்றார். இருந்தபோதும் அதற்குள் ஹிஜாபை பிடித்த நிதிஷ், அதை விலக்க முயன்றார். அப்போது மேடையில் சுகாதார துறை அமைச்சர் மங்கள் பாண்டே, முதல்வரின் முதன்மை செயலர் தீபக் குமார் ஆகியோர் சிரித்தபடி நின்றனர்.
“நிதிஷ் குமாருக்கு என்ன ஆனது? அவரது மனநிலை மிகவும் மோசமடைந்துள்ளது. அல்லது இப்போது அவர் நூறு சதவீத சங்கி ஆகிவிட்டாரா?” என ராஷ்ட்டிரிய ஜனதா தளம் எக்ஸ் தளத்தில் வீடியோவை பகிர்ந்து விமர்சித்துள்ளது.
“பெண்ணின் ஹிஜாபை விலக்கியதன் மூலம் இஸ்லாமிய சமூகத்தின் மீது என்டிஏ கூட்டணி கொண்டுள்ள மனப்பான்மையை வெளிப்படுத்துகிறது. பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை வெளிப்படுத்தும் வகையில் நிதிஷின் அரசியல் அமைந்துள்ளது. மக்கள் தங்களது மத மரபுகளையும் பழக்கவழக்கங்களையும் பின்பற்றுவதற்கான சுதந்திரத்துக்கு இந்திய அரசியலமைப்புச் சட்டம் உத்தரவாதம் அளிக்கிறது” என ஆர்ஜேடி செய்தித் தொடர்பாளர் இஜாஸ் அகமது தெரிவித்துள்ளார்.
பொதுவெளியில் இதுபோன்ற செயலில் பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் ஈடுபடுவது இது முதல் முறை அல்ல. கடந்த ஜனவரியில் காந்தியின் நினைவு நாளில் மலரஞ்சலி செலுத்திய பிறகு திடீரென கை தட்டினார். கடந்த மார்ச் மதம் தேசிய கீதம் பாடப்பட்ட போது தனது தனி செயலாளர் உடன் சிரித்த படி பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.