படம்: எம்.சாம்ராஜ்
புதுச்சேரி: புதுச்சேரியில் ரேஷன் கடைகளில் அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் 2 கிலோ இலவச கோதுமை தரும் திட்டத்தை முதல்வர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வைத் தொடர்ந்து முதல்வர் செய்தியாளர்களிடம் கூறியது: “புதுச்சேரியில் சட்டப்பேரவையில் அறிவித்தபடி இலவச அரிசி, கோதுமை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம். தற்போது கோதுமை மாதம் இரண்டு கிலோ இலவசமாக அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் தரப்படும். முதற்கட்டமாக இரண்டு மாதங்களுக்கு என நான்கு கிலோ கோதுமை தருகிறோம்.
மஞ்சள் ரேஷன் அட்டைக்கு 10 கிலோ இலவச அரிசி, சிவப்பு ரேஷன் அட்டைக்கு 20 கிலோ அரிசி வழங்கி வருகிறோம். இனி அரிசியுடன் கோதுமையும் இலவசமாக ரேஷனில் தரப்படுகிறது. ரூ.750 மதிப்புள்ள பொங்கல் பொருட்கள் ரேஷனில் ஜனவரி 3, 4 மற்றும் 5-ம் தேதிகளில் தரப்படும். மகளிர் உதவித் தொகையை உயர்த்தி தருவது உட்பட சட்டப்பேரவையில் அறிவித்த அனைத்து வாக்குறுதியும் செயல்படுத்தப்படும்.
‘ரேஷன் கடைகள் சரிவர இயங்கவில்லை’ என்ற குற்றச்சாட்டை குறிப்பிட்டு கேட்கிறீர்கள். அரிசி, கோதுமை, தீபாவளி பொருட்கள் ரேஷன் மூலம் தருகிறோம். பொங்கல் பொருட்கள் விநியோகத்தையும் ரேஷனில்தான் செயல்படுத்துகிறோம். இதில் குறைகள் இருந்தால் தெரிவிக்கலாம்.
அரசு உள்கட்டமைப்பை மேம்படுத்தி செயல்படுத்துகிறது. பல பணிகளை முடித்துள்ளோம். இதற்கு முன் இருந்த அரசில் என்ன நடந்தது என அனைவருக்கும் தெரியும். பல துறைகளில் தற்போது பணிகள் நடக்கின்றன.கூட்டுறவு சர்க்கரை ஆலையை தனியார் பங்களிப்புடன் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தேர்தல் வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறோம். காலி பணியிடங்களை நிரப்பி வருகிறோம். ஐந்தாண்டு காலம் நிறைவடையும்போது முழுமையாக வாக்குறுதிகள் நிறைவேற்றியது தெரியும். நாங்கள், சொல்லாததையும் செய்துள்ளோம்” என்று தெரிவித்தார். சட்டப்பேரவைத்தலைவர் செல்வம், அமைச்சர் திருமுருகன், அரசு கொறடா ஏகேடி ஆறுமுகம், எம்எல்ஏ ரமேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
பாக்கெட்டில் ஆளுநர் படம் இல்லை:
புதுச்சேரி ரேஷனில் தரப்படும் இலவச கோதுமை பாக்கெட்டில் பிரதமர் மோடி, முதல்வர் ரங்கசாமியின் படங்கள் மட்டுமே உள்ளன. ஆளுநர் கைலாஷ்நாதன் படம் இல்லை. ஏற்கெனவே விநியோகம் செய்யப்பட்டு வந்த அரிசி மூட்டைகளில் ஆளுநர் கைலாஷ்நாதன் படம் இடம் பெற்றிருந்தது.
இது தொடர்பாக முதல்வரிடம் கேட்டதற்கு, “அரிசி, கோதுமை விநியோக பாக்கெட்டுகளில் முதல்வர், பிரதமர் படங்கள் போதும். தனது படம் வேண்டாம் என்று ஆளுநர் தெரிவித்துள்ளார். அதன்படி அச்சிட்டுள்ளோம்” என்று தெரிவித்தார்.