

பாட்னா: பிஹார் தலைநகர் பாட்னாவில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் சாம்ராட் சவுத்ரி பேசும்போது,‘‘இலவச மின்சாரத்துக்காக மாநில அரசு பெரும் தொகையை மானியமாக வழங்குகிறது. வசதிபடைத்தோர், வருமான வரி செலுத்துவோர் இலவச மின்சாரத்துக்கான மானியத்தை தாமாக முன்வந்து விட்டுத்தர வேண்டும்.
அவர்கள் மின் கட்டணத்தை செலுத்தினால் அரசின் நிதிச்சுமை குறையும். இதன்மூலம் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்த முடியும்,’’ என்று கேட்டுக் கொண்டார்.
பிஹாரில் 2.22 கோடி வீட்டு உபயோக மின்நுகர்வோர் உள்ளனர். அங்கு அனைத்து வீட்டு உபயோக மின்நுகர்வோருக்கும் மாதத்துக்கு 125 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்காக பிஹார் அரசு ஆண்டுதோறும் ரூ.23,000 கோடியை மாநில மின் வாரியத்துக்கு மானியமாக வழங்குகிறது.