

சென்னை: தமிழகத்தில் மதுபானக் கடைகளை ஒட்டியுள்ள வளாகங்களில் மட்டுமின்றி, கடைகளில் இருந்து 100 மீட்டர் தூரம் வரை பார்கள் அமைக்க அனுமதி அளித்து தமிழக அரசு விதிகளில் திருத்தம் செய்துள்ளது.
தமிழகத்தில் டாஸ்மாக் பார்களுக்கான உரிமம் கடந்த ஜனவரி மாதத்துடன் முடிவடைந்தது. சட்டப்பேரவை தேர்தல் பணிகள் காரணமாக, இந்த அனுமதி ஜூன் மாதம் வரையும், பின்னர் புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு அக்டோபர் வரையும் நீட்டிக்கப்பட்டது.
டெண்டர் நடைமுறைகளில் தாமதம் ஏற்படுவதால், டிசம்பர் வரை பழைய அனு மதியே நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பார்களுக்கான புதிய விதிகளை வகுத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து உள்துறைச் செயலர் கார்த்திக் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறி யிருப்பதாவது: டாஸ்மாக் கடையை ஒட்டியுள்ள இடத்திலோ அல்லது கடையில் இருந்து 100 மீட்டர் தூரத்துக்கு உள்ளாகவோ டெண்டர் எடுத்து பார் நடத்தலாம்.
நகர்ப்புற வளர்ச்சி மற்றும் திட்டமிடல் ஆணையங்களால் வணிக அல்லது தொழில் துறை பகுதிகளாக அறிவிக்கப்பட்ட இடங்களுக்கு இந்த 100 மீட்டர் தூர அனுமதி பொருந்தாது. அதேநேரம், ஒருங்கிணைந்த பழங்குடியினர் மேம்பாட்டுத் திட்டப் பகுதிகளில் பார்கள் அமைக்க முற்றிலும் தடை விதிக்கப்படுகிறது.
விதிமுறைகள் என்னென்ன?
ஒவ்வொரு பாரும் குறைந்தபட்சம் 20 சதுர மீட்டர் தரைத்தளப் பரப்புடன் விசாலமாக இருக்க வேண்டும். அங்கு தூய்மையான குடிநீர், கை கழுவும் வசதி, போதுமான மேஜை, நாற்காலிகள் கட்டாயம் இடம்பெற வேண்டும். பார் மற்றும் சுற்றுப்புறத்தை சுகாதாரமாக வைத்திருக்க வேண்டும்.
வெளியில் இருந்து பார்த்தால் பாருக்குள் மது அருந்துவது தெரியாத வகையில் மறைப்புத் திரை அமைக்க வேண்டும். 21 வயதுக்குக் குறைவான நபர்களை எக்காரணம் கொண்டும் பாருக்குள் அனுமதிக்கக் கூடாது. அவர்களை பணியிலும் அமர்த்தக் கூடாது.
மது அருந்துவதால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள், தீமைகள் குறித்த எச்சரிக்கை பலகைகளை பார்களில் பொதுமக்களுக்கு தெரியும் வகையில் வைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.