

பாட்னா: நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்தியக் கல்வி அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதான் பதவி விலகக்கோரி பிஹாரில் கடந்த 25-ம் தேதி பந்த் நடைபெற்றது. அப்போது சிவான் மாவட்டத்தில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
அப்போது பிஹார் ஆயுதப்படை காவலர் ஒருவர் ஏ.கே.47 ரக துப்பாக்கியால் மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதில் 3 பேர் காயம் அடைந்தனர். இவர்கள் பாட்னாவில் உள்ள ஜெய்பிரபா மெதந்தா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காயம் அடைந்தவர்களில் ஒருவர் 15 வயது சிறுவன். இவர் கடையில் வேலை பார்க்கிறார்.
பணி முடித்து வீடு திரும்பும் போது போராட்டக் கூட்டத்தில் சிக்கி குண்டு காயம் அடைந்துள்ளார். இவர் கழுத்தில் பாய்ந்த குண்டை மருத்துவர்கள் அகற்றினர். இந்நிலையில் காவலர் ஏ.கே.-47 துப்பாக்கியால் சுடும் வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது.
மாணவர்கள் மீது ஏ.கே.47 துப்பாக்கியால் சுட்டதை எதிர்க்கட்சி தலைவர்கள் கடுமையாக கண்டித்தனர். இதையடுத்து துப்பாக்கிச் சூடு நடத்திய காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.