போஜ்சாலா வழக்கு: இரு மத வழிபாடுகளுக்கும் உச்ச நீதிமன்றம் அனுமதி

போஜ்சாலா வழக்கு: இரு மத வழிபாடுகளுக்கும் உச்ச நீதிமன்றம் அனுமதி
Updated on
2 min read

புதுடெல்லி: போஜ்சாலா வழக்கில் இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்கள் இரு தரப்பினருக்கும் தங்களது மத வழிபாடுகளை செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

போஜ்சாலா வழக்கில் இந்து, முஸ்லிம் இரு தரப்பினரும் மத வழிபாடுகளை நிகழ்த்த உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, கமல் மவுலா மசூதியில் தொழுகைக்கும், வசந்த பஞ்சமி தினத்தில் வழிபாட்டிற்கும் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

போஜ்சாலா வளாகத்தில் மத நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்து மற்றும் முஸ்லிம் குழுக்கள் அனுமதி கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகள் சூர்ய காந்த், ஜாய்மால்யா பக்ஷி, விபுல் எம்.பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணை நடைபெற்றது.

இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, இன்றைய தினம் இந்துக்கள் வசந்த பஞ்சமி தினத்திற்கான சரஸ்வதி பூஜை நடத்தவும், முஸ்லிம்கள் கமல் மவுலா மசூதியில் மதியம் 1 முதல் 3 மணி வரை தொழுகை நடத்தவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், தொழுகைக்காக தொலைவில் இருந்து முன்கூட்டியே வருபவர்களின் விவரங்களை மாவட்ட நிர்வாகத்திடம் வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், வெள்ளிக்கிழமை என்பதால் இரு தரப்பினரும் பரஸ்பர மரியாதையைக் கடைப்பிடிக்கவும், சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பதற்காக மாநில மற்றும் மாவட்ட நிர்வாகத்துக்கு மாநில அரசு ஒத்துழைப்பு வழங்க உச்சநீதிமன்ற வேண்டுகோள் விடுத்துள்ளது.

மேலும், தீர்ப்பு குறித்து பேசிய நீதிபதிகள்: ”கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் மற்றும் அட்வகேட் ஜெனரல் கண்காணிப்பில் தொழுகை மற்றும் வசந்த பஞ்சமி சரஸ்வதி பூஜைக்கு என்று தனித்தனியே இடங்கள் ஒதுக்கி எந்தவிதமான இடையூருமின்றி இரு மத வழிபாடுகளும் செய்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், சரஸ்வதி பூஜையை காண பார்வையாளர்களுக்கு எந்தவித கட்டணமும் இன்றி பொருத்தமான அனுமதிச் சீட்டுகளை நிர்வாகம் வழங்கலாம். அல்லது சடங்குகள் அமைதியாக நடைபெறுவதை உறுதி செய்ய வேறு எந்த நியாயமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளலாம்” என்று நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

போஜ்சாலா பகுதி மத்திய அரசின் இந்திய தொல்லியல் துறை(ஏஎஸ்ஐ) பாதுகாப்பில் உள்ளது. இப்பகுதியில் போஜ்சாலாவை இந்துக்கள் வாக் தேவிக்கு (சரஸ்வதி தேவி) அர்ப்பணிக்கப்பட்ட கோவிலாகக் கருதுகின்றனர். அதே சமயம், இப்பகுதியைச் சேர்ந்த முஸ்லிம் சமூகத்தினர் கமல் மவுலா மசூதி என்று அழைக்கின்றனர்.

கடந்த 2003ம் ஆண்டு ஏப்ரல் 7ம் தேதி முதல் இந்துக்கள் போஜ்சாலா வளாகத்தில் செவ்வாய்க் கிழமைகளில் பூஜை செய்கிறார்கள். இதேபோல், முஸ்லிம்கள் வெள்ளிக் கிழமைகளில் அந்த வளாகத்தில் தொழுகை நடத்துகிறார்கள்.

வசந்த பஞ்சமி அன்று பிரார்த்தனை செய்ய இந்துக்களுக்கு பிரத்யேக உரிமை கோரி ’இந்து முன்னணி ஃபார் ஜஸ்டிஸ்’ எனும் அமைப்பு தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் விசாரித்து வந்தது. வழக்கறிஞர் விஷ்ணு சங்கர் ஜெயின் மூலம் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனு, கடந்த செவ்வாய்க்கிழமை அவசர விசாரணைக்கு பட்டியலிடப்பட்டது. இதன் மீதான உத்தரவு நேற்று வெளியாகியது.

இரண்டாவது வழக்கு: இதனிடையே, போஜ்சாலா வளாகத்தின் ’அறிவியல் ஆய்வு’ தொடர்பாக மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம் 2024ம் ஆண்டு மார்ச் 11 அன்று பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மௌலானா கமாலுதீன் நலச்சங்கம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

அதேசமயம், இந்த வழக்கை உயர் நீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகளில் ஒருவரின் தலைமையிலான அமர்வு விசாரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது.

மேலும், போஜ்சாலாவில் அறிவியல் ஆய்வை முடித்து ஏஎஸ்ஐ, அதன் அறிக்கையை ஒரு சீலிட்ட உறையில் மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளதைக் குறிப்பிட்ட உச்ச நீதிமன்றம், அந்த அறிக்கையை சம்மந்தப்பட்ட தரப்பினருக்கு வழங்க வேண்டும் என்றும், அவர்கள் அதன் மீது ஏதேனும் ஆட்சேபனைகள் இருந்தால் அதனை மனுவாக தாக்கல் செய்யலாம் எனவும் மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

அத்தகைய பகுதியை நகலெடுக்க முடியாவிட்டால், சம்பந்தப்பட்ட தரப்பினர் தங்கள் வழக்கறிஞர்கள் முன்னிலையில் அதை ஆய்வு செய்ய அனுமதிக்கப்படலாம். ஆட்சேபனைகள் தாக்கல் செய்யப்பட்ட பிறகு, வழக்கு இறுதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

போஜ்சாலா வழக்கு: இரு மத வழிபாடுகளுக்கும் உச்ச நீதிமன்றம் அனுமதி
நடைபாதை வியாபாரிகளுக்கான கடன் அட்டை திட்டம்: திருவனந்தபுரத்தில் பிரதமர் மோடி தொடக்கம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in