திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் இருந்து தாம்பரம் வரையிலான அமிர்த பாரத் விரைவு ரயில் உட்பட 3 அமிர்த பாரத விரைவு ரயில் சேவைகளையும் ஒரு பயணிகள் ரயில் சேவையையும் கொடி அசைத்து தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி, நடைபாதை வியாபாரிகளுக்கான பிரதமரின் ஸ்வாநிதி கடன் அட்டைகளை (கிரெடிட் கார்டுகளை) அறிமுகப்படுத்தினார்.
கேரள தலைநகர் திருவனந்தபுரம் வந்த பிரதமர் மோடிக்கு, நகரின் சாலைகளில் மக்கள் பெருமளவில் கூடி உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து, பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைக்கும் மற்றும் அடிக்கல் நாட்டும் அரசு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இதில், கேரள ஆளுநர் ராஜேந்திர அர்லேகர், முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விழாவில், நாட்டின் ரயில் இணைப்பை மேம்படுத்தும் வகையில், மூன்று அமிர்த பாரத் விரைவு ரயில்கள், ஒரு பயணிகள் ரயில் என நான்கு புதிய ரயில் சேவைகளைப் பிரதமர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். நாகர்கோவில் - மங்களூரு அமிர்த பாரத் விரைவு ரயில், திருவனந்தபுரம் - தாம்பரம் அமிர்த பாரத் விரைவு ரயில், திருவனந்தபுரம் - சார்லபள்ளி அமிர்த பாரத் விரைவு ரயில், திருச்சூர்- குருவாயூர் இடையே ஒரு புதிய பயணிகள் ரயில் ஆகியவற்றை பிரதமர் மோடி கொடி அசைத்து தொடங்கிவைத்தார். மேலும், சுகாதாரத் துறை சார்ந்த திட்டங்களையும் பிரதமர் மோடி தொடங்கிவைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, ‘‘கேரளாவின் வளர்ச்சிக்கான மத்திய அரசின் முயற்சிகள் இன்று புதிய உத்வேகத்தைப் பெற்றுள்ளன. இன்று முதல், கேரளாவில் ரயில் இணைப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது. திருவனந்தபுரத்தை நாட்டின் ஒரு முக்கிய ஸ்டார்ட்அப் மையமாக மாற்றுவதற்கான முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. இன்று, ஏழைகளின் நலனுக்கான ஒரு பெரிய முயற்சி கேரளாவிலிருந்து நாடு முழுவதற்கும் தொடங்கப்படுகிறது. பிரதமரின் ஸ்வாநிதி கிரெடிட் கார்டு திட்டம்தான் அது. இது, நாடு முழுவதும் உள்ள தெரு வியாபாரிகள் மற்றும் நடைபாதை தொழிலாளர்களுக்கு பயனளிக்கும்.
தெருவோர வியாபாரிகளின் நிலைமை மிகவும் மோசமாக இருந்தது. பொருட்களை வாங்குவதற்காக, அவர்கள் பெரும்பாலும் அதிக வட்டி விகிதத்தில் சிறிய தொகையைக் கடனாகப் பெற வேண்டியிருந்தது. முதல் முறையாக, மத்திய அரசு பிஎம் ஸ்வநிதி திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தின் மூலம் லட்சக்கணக்கான தெருவோர வியாபாரிகள் வங்கிக் கடன்களைப் பெற்றனர். அவர்களில் பலர் தங்கள் வாழ்நாளில் முதல் முறையாக வங்கிகளில் கடன் பெற்றனர். தற்போது, ஒரு படி மேலே சென்று, தெருவோர வியாபாரிகளுக்காக பிரத்யேகமாக ஒரு கடன் அட்டையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க, ஒட்டுமொத்த தேசமும் ஒன்றிணைந்து செயல்படுகிறது. இந்த வளர்ச்சியில் நமது நகரங்கள் முக்கியப் பங்கு வகித்துள்ளன. கடந்த 11 ஆண்டுகளாக, நமது அரசாங்கம் நகர்ப்புற உள்கட்டமைப்பில் குறிப்பிடத்தக்க முதலீடுகளைச் செய்துள்ளது. இணைப்பு வசதி, அறிவியல் மற்றும் புத்தாக்கம், சுகாதாரத் துறை ஆகியவற்றில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அதிக முதலீடுகளைச் செய்து வருகிறது.
ஏழைகளின் மின்சாரச் செலவைக் குறைக்க உதவும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு ரூ. 5 லட்சம் வரை இலவச சுகாதார காப்பீட்டு வசதி வழங்கப்படுகிறது. பெண்களின் நலனை மேம்படுத்த, ‘மாத்ரு வந்தனா’ போன்ற திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
அதோடு, ஆண்டுக்கு ரூ. 12 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரி மத்திய அரசு விலக்கு அளித்துள்ளது. இந்த முயற்சி கேரள மக்களுக்கு, குறிப்பாக நடுத்தர வர்க்கத்தினருக்கு கணிசமாகப் பயனளித்துள்ளது’’ என தெரிவித்தார்.