

பெங்களூரு: மத்திய அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு மக்கள் நல திட்டங்களுக்கு பகவத் கீதைதான் அடிப்படை என்று உடுப்பி ஸ்ரீ கிருஷ்ணர் கோயிலில் வழிபாடு நடத்திய பிறகு பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணர் மடத்தில் 1 லட்சம் பேர் பகவத் கீதையை பாராயணம் செய்யும் நிகழ்ச்சியை தொடங்கி வைக்க பிரதமர் மோடி நேற்று கர்நாடக மாநிலத்துக்கு வருகை தந்தார். டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் மங்களூரு வந்த பிரதமர் பின்னர் ராணுவ ஹெலிகாப்டர் மூலம் உடுப்பியை வந்தடைந்தார்.
உடுப்பி கிருஷ்ணன் கோயிலுக்கு சாலை மார்க்கமாக வந்த பிரதமருக்கு மக்கள் மலர்தூவி வரவேற்பு அளித்தனர். உடுப்பி கிருஷ்ணன் கோயிலுக்கு வந்த பிரதமருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. கோயில் வளாகத்தில் கருவறைக்கு எதிரே கட்டப்பட்ட சுவர்ண தீர்த்த மண்டபத்தை பிரதமர் திறந்து வைத்து கிருஷ்ண மடத்தின் மடாதிபதி தீர்த்த சுவாமிகளை சந்தித்து ஆசி பெற்றார்.
அதன் பின்னர் மாணவர்கள், துறவிகள், அறிஞர்கள் மற்றும் பல்வேறு தரப்பைச் சேர்ந்த ஒரு லட்சம் பேர் ஒன்றிணைந்து பகவத் கீதையை ஒரே நேரத்தில் பாராயணம் செய்யும் நிகழ்ச்சியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பிரதமர் மோடி பேசியதாவது: மூன்று நாட்களுக்கு முன்பு நான் கீதையின் புண்ணிய பூமியான குருஷேத்திரத்தில் இருந்தேன். இப்போது, கிருஷ்ணரால் ஆசீர்வதிக்கப்பட்ட ஜகத்குரு ஸ்ரீ மத்வாச்சாரியரால் புகழ்பெற்ற இந்த நிலத்தை பார்வையிடுவது எனக்கு மிகுந்த ஆத்ம திருப்தியை அளிக்கிறது.
நான் குஜராத்தில் பிறந்தேன். குஜராத்தும் உடுப்பியும் ஆழமான உறவைக் கொண்டுள்ளன. மாதா ரூமினி துவாரகையில் உள்ள கிருஷ்ணரின் சிலையை வழிபட்டு வந்ததாக நம்பப்படுகிறது. பின்னர் அந்த சிலை ஜகத்குரு மத்வாச்சாரியரால் இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டது. கடந்த ஆண்டு நான் கடலுக்கு அடியில் துவாரகைக்கு சென்றேன். இப்போது இங்கு கிருஷ்ணர் சிலையின் தரிசனம் எனக்கு ஆத்மார்த்தமான ஆன்மீக அனுபத்தை அளித்துள்ளது.
ஜன சங்கம் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் நல்லாட்சி மாதிரியின் பிறப்பிடமாக உடுப்பி இருந்து வருகிறது. இது கர்மபூமி.
கடந்த 1968-ம் ஆண்டு உடுப்பி மக்கள் நமது ஜன சங்க வேட்பாளர் வி.எஸ். ஆச்சார்யாவை இங்குள்ள நகராட்சி மன்றத்துக்கு தேர்ந்தெடுத்தனர். இதன் மூலம், உடுப்பி ஒரு புதிய நிர்வாக மாதிரிக்கு அடித்தளமிட்டது. இன்று தேசிய அளவில் ஈர்க்கப்பட்ட நாம் காணும் தூய்மை பிரச்சாரம் முன்பு உடுப்பியால் ஐந்து தசாப்தங்களுக்கு முன்பு ஏற்றுக் கொள்ளப்பட்டது. நீர் வழங்கல், வடிகால் அமைப்புகளுக்கு ஒரு புதிய முன் மாதிரி 1970-களில் உடுப்பியில் செயல்படுத்தப்பட்டது.
பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் போதனைகள் எல்லா யுகங்களிலும் நடைமுறைக்கு ஏற்றவை. பகவத் கீதையின் வார்த்தைகள் தனி நபருக்கு மட்டுமல்ல தேசத்தின் கொள்கைகளுக்கும் வழிகாட்டுகின்றன. பொது நலனுக்காக பாடுபட வேண்டும் என்பதே கீதையின் சாராம்சம். அந்த அடிப்படையில்தான் அனைவருக்கும் வீடு, பெண்களுக்கு பாதுகாப்பு, பெண்களுக்கு அதிகாரமளித்தல், ஆயுஷ்மான் பாரத் காப்பீடு போன்ற மக்கள் நல திட்டங்களை மத்திய அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.