

பெங்களூரு: பெங்களூருவில் உள்ள ஜெய நகரை சேர்ந்தவர் மஞ்சுநாத் (74). இவரது வீட்டு தொலைபேசி எண்ணுக்கு கடந்த மார்ச் 9-ம் தேதி மூத்த தொலைத்தொடர்பு அதிகாரி எனக் கூறி, ரஞ்சிதா என்ற பெண் பேசியுள்ளார்.
அப்போது அவர், ‘‘உங்கள் தொலைபேசி எண் மற்றும் ஆதார் எண் ஹவாலா பண மோசடி, போதைப்பொருள் ஆகியவற்றுக்கு பயன்படுத்தப் பட்டுள்ளது. இதனால் உங்கள் மீதும் உங்களின் மனைவி மீதும் போதை கடத்தல் வழக்கு, மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது’’ என்று கூறியுள்ளார்.
அதன்பின்னர் பெங்களூரு துணை ஆணையர் எனக் கூறி அசோக் என்பவர் பேசியுள்ளார். அவரும் மஞ்சுநாத்தை மிரட்டியுள்ளார். இதையடுத்து மர்ம கும்பலைச் சேர்ந்த 6 பேர் போலீஸ் அதிகாரி போல அவ்வப்போது தொடர்பு கொண்டு மிரட்டியுள்ளனர்.
பின்னர் மஞ்சுநாத் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.3.17 கோடியை மிரட்டி பெற்றுள்ளனர். மஞ்சுநாத் 22 தவணைகளில் ரூ.3 கோடியே 17 லட்சத்து 80 ஆயிரத்தை 11 வங்கி கணக்குகளுக்கு அனுப்பியுள்ளார்.
பணம் அனுப்பிய பிறகு எந்த தொலைபேசி அழைப்பும் வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த மஞ்சுநாத் நேற்று பெங்களூரு மாநகர தெற்கு மண்டல காவல் ஆணையரிடம் புகார் அளித்தார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் மர்ம நபர்கள் 6 பேர் மீது 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.