

பெங்களூரு: பெங்களூருவில் எச்டிஎஃப்சி வங்கி ஏடிஎம்களில் பணம் நிரப்பும் வேனில் ரூ.7.11 கோடியை மர்ம நபர்கள், ரிசர்வ் வங்கி அதிகாரிகளைப் போல நடித்து கொள்ளையடித்து சென்றனர். சித்தாபுரா போலீஸார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, 8 தனிப்படைகளை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதல்கட்டமாக வேனில் இருந்த வங்கி ஊழியர் தம்மையா, துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர் ராஜண்ணா, ஓட்டுநர் வினோத், காவலர் அஃப்தாப் ஆகிய 4 பேரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.
மேலும் நால்வரின் சமூக வலைதள கணக்குகள், செல்போன், கணினி ஆகியவற்றை கைப்பற்றி ஆராய்ந்து வருகின்றனர். செல்போன் எண்களுக்கு வந்த அழைப்புகள், குறுஞ்செய்திகள், புகைப்படங்கள், வாட்ஸ் அப் தகவல்கள் ஆகியவற்றை ஆராய்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் ஏடிஎம் பணம் நிரப்பும் வாகனத்தின் பாதுகாவலராக பணியாற்றிய கோவிந்தராஜபுரா காவல் நிலையத்தைச் சேர்ந்த போலீஸ்காரர் ஒருவரையும், முன்னாள் ராணுவ வீரர் ஒருவரையும் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இருவரும் கொள்ளை சம்பவம் நடந்த தினத்தன்று தொடர்ந்து செல்போனில் பேசி வந்ததையும் போலீஸார் கண்டறிந்துள்ளனர்.