

மீட்கப்பட்ட ரூ.5.7 கோடி ரொக்கம்
பெங்களூரு: பெங்களூருவில் நவம்பர் 19 அன்று பகல்நேரத்தில் நடந்த துணிகரமான ஏடிஎம் வேன் கொள்ளையில், 50 மணி நேரத்தில் ரூ.5.7 கோடி மீட்கப்பட்டதுடன், ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
பெங்களூருவில் உள்ள ஜே.பி. நகரில் எச்டிஎஃப்சி வங்கிக் கிளையில் இருந்து நவம்பர் 19 அன்று பணம் ஏற்றிக்கொண்டு சிஎம்எஸ் நிறுவனத்தின் வேன் ஜெயநகர் அசோகா தூண் அருகே சென்றது. அப்போது இன்னோவா வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் அதனை வழிமறித்து ரிசர்வ் வங்கி அதிகாரிகளை போல நடித்து ரூ.7.11 கோடியை கொள்ளையடித்து சென்றனர்.
இதுகுறித்து சித்தபுரா போலீஸார் வழக்குப்பதிவு செய்து, 4 தனிப்படைகளை அமைத்து விசாரணை நடத்தினர். பணம் கொள்ளையடிக்கப்பட்டபோது சிஎம்எஸ் வேனில் இருந்த வங்கி ஊழியர் தம்மையா, துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர் ராஜண்ணா, ஓட்டுநர் வினோத், காவலர் அஃப்தாப் ஆகிய 4 பேரிடமும் தனிப்படை போலீஸார் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.
சிசிடிவி கவரேஜ் இல்லாத பகுதிகளைத் தேர்ந்தெடுத்து வாகனத்தை ஓட்டிச் சென்றதாலும், போலி எண்களைக் கொண்ட வாகனங்களைப் பயன்படுத்தியதாலும், மொபைல் போன்களைத் தவிர்த்ததாலும் போலீஸார் நடத்திய விசாரணையில் சிக்கல்கள் ஏற்பட்டது. இதனால் 200 போலீஸார் தப்பி ஓடியவர்களைக் கண்டறிய வெவ்வேறு திசைகளில் அனுப்பப்பட்டனர்.
இதனை தொடர்ந்து, குற்றவாளிகளை கைது செய்த காவல்துறையினர் ரூ.5.7 கோடி பணத்தை பறிமுதல் செய்தனர். போலீஸ் கான்ஸ்டபிள் அன்னப்ப நாயக், பணம் எடுத்துச் செல்லும் வாகன பொறுப்பாளர் கோபால் பிரசாத் மற்றும் பணம் எடுத்துச் செல்லும் வாகன நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் ஜே. சேவியர் ஆகிய மூவரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.
துணிகர கொள்ளையில் ஈடுபட்டவர்களை 50 மணி நேரத்தில் கைது செய்த புலனாய்வு குழுவுக்கு பெங்களூரு நகர காவல் ஆணையர் சீமந்த் குமார் சிங் ரூ.5 லட்சம் ரொக்கப் பரிசை அறிவித்தார்.