

நமன்ஷ் சியால்
சிம்லா: துபாய் விமானக் கண்காட்சியின் போது நடந்த தேஜஸ் விமான விபத்தில் உயிரிழந்த விங் கமாண்டர் நமன்ஷ் சியாலின் மரணத்தால் இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அவரது சொந்த கிராமம் ஆழ்ந்த துக்கத்தில் மூழ்கியுள்ளது.
துபாயில் நேற்று நடைபெற்ற விமானக் கண்காட்சியில் சாகசத்தில் ஈடுபட்ட இந்திய விமானப்படையின் ‘தேஜஸ்’ போர் விமானம் கட்டுப்பாட்டை இழந்து தரையில் மோதி தீப்பிடித்தது. இந்த விபத்தில் பைலட் விங் கமாண்டர் நமன்ஷ் சியால் உயிரிழந்தார்.
இமாச்சலப் பிரதேசத்தின் தெஹ்ஸில் நக்ரோட்டா பக்வானில் உள்ள பாட்டியல்கர் கிராமத்தைச் சேர்ந்தவர் 34 வயதான விமானி நமன்ஷ் சியால், அவரது மனைவியும் இந்திய விமானப்படை அதிகாரியாக உள்ளார். அவர் ஆறு வயது மகள் மற்றும் அவரது பெற்றோருடன் வசித்து வந்தார்.
நேற்று துபாயில் நடந்த துயரச் சம்பவத்தின் செய்தியைக் கேட்டதும் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் அவரது சொந்த ஊரில் துக்கத்தில் மூழ்கினர். இதுகுறித்து பேசிய நமன்ஷின் மாமா ஜோகிந்தர் நாத் சியால், ”மாலை 5:00 மணியளவில் விபத்து பற்றிய தகவல் எங்களுக்குக் கிடைத்தது, அப்போது அவரது தந்தை எனக்கு போன் செய்து செய்திகளைப் பார்க்கச் சொன்னார். கிராம மக்கள் இங்கே கூடியிருக்கிறார்கள், அனைவரும் மிகவும் சோகமாக இருக்கிறார்கள்.” என்றார்
விங் கமாண்டர் சியாலின் உறவினரான ரமேஷ் குமார், “நமன்ஷ் சியாலின் பெற்றோர் தற்போது தமிழ்நாட்டின் கோயம்புத்தூருக்கு அருகிலுள்ள சூலூர் விமானப்படை நிலையத்தில் உள்ளனர். அவரது மனைவியும் விமானப்படையில் அதிகாரியாக பணியாற்றுகிறார், அவர் கல்வி நிமித்தமாக கொல்கத்தாவில் உள்ளார். அவரது தந்தை ஜெகநாத் சியால், இந்திய ராணுவத்தின் மருத்துவப் படையில் பணியாற்றினார். பின்னர் கல்வித் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றார். நமன்ஷின் உயிரிழப்பால் இன்று முழு கிராமமும் மிகவும் சோகமாக உள்ளது.” என்றார்.
துபாய் விமானக் கண்காட்சியில் நடைபெற்ற தேஜஸ் ஜெட் விபத்தில், தனது மகன் உயிரிழந்த சம்பவம் குறித்த செய்திகளை யூடியூபில் பார்த்துக் கொண்டிருந்தபோது தெரிந்துகொண்டேன் என அவரின் தந்தை தெரிவித்தார்.
துபாய் விமானக் கண்காட்சியில் தேஜஸ் லைட் காம்பாட் விமானம் (LCA Mk-1) விபத்துக்குள்ளானதில் விமானி விங் கமாண்டர் நமன்ஷ் சியால் உயிரிழந்ததாக விமானப்படை உறுதி செய்தது.
தேஜஸ் விமான விபத்தில் உயிரிழந்த விமானி நமன்ஷ் சியாலின் தந்தை ஜெகன்நாத் சியால் இமாச்சலப் பிரதேசத்தின் காங்க்ராவைச் சேர்ந்த ஓய்வுபெற்ற பள்ளி முதல்வர். விபத்து குறித்து அவர், “சம்பவத்திற்கு ஒரு நாள் முன்பு நமன்ஷிடம் பேசினேன். அப்போது எனது மகன் தொலைக்காட்சியிலோ அல்லது யூடியூபிலோ தனது விமான சாகச நிகழ்ச்சியைப் பார்க்கும்படி சொன்னார்.
நேற்று மாலை 4 மணியளவில், துபாயில் நடந்து வரும் விமானக் கண்காட்சியின் வீடியோக்களை யூடியூபில் தேடிக்கொண்டிருந்தபோது, விமான விபத்து குறித்த செய்திகளைப் பார்த்தேன். விமான விபத்து பற்றி தகவல் தெரிந்ததும் என் மருமகளை அழைத்து தகவல் சொன்னேன்.
சிறிது நேரம் கழித்து ஆறு விமானப்படை அதிகாரிகள் எங்கள் வீட்டிற்கு வந்தனர். அப்போது என் மகனுக்கு ஏதோ மோசமானது நடந்ததை உணர்ந்தேன்.” என்றார்.