

சிங்கூர்: மேற்கு வங்கத்தில் ஆட்சியில் உள்ள திரிணமூல் காங்கிரஸ், நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்தை ஏற்படுத்துவதாகவும், இந்த மகா காட்டாட்சியை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்றும் சிங்கூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தின் சிங்கூரில் ரூ.830 கோடி மதிப்புள்ள பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைப் பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர், "டெல்லியில் உள்ள இந்தியா கேட் முன்பாக நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் சிலையை நிறுவியது பாஜக அரசு. அந்தமான் நிகோபார் தீவுகளில் உள்ள ஒரு தீவுக்கு நேதாஜியின் பெயரை சூட்டியது பாஜக அரசு.
டெல்லியில் பாஜக அரசை நீங்கள் தேர்ந்தெடுத்ததால், வங்க மொழிக்கு செம்மொழி அந்தஸ்து கிடைத்தது. துர்கா பூஜைக்கு யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய அங்கீகாரம் கிடைத்தது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் திரிணமூல் காங்கிரஸ் இடம் பெற்றிருந்தது. ஆனால், அவர்கள் இதைச் செய்யவில்லை. நான் செய்ததற்கு, மேற்கு வங்கத்தின் மீதும், இங்குள்ள மக்கள் மீதும் எனக்குள்ள அன்பே காரணம்.
திரிணமூல் காங்கிரஸ் அரசு, மத்திய அரசின் திட்டங்களை தடுத்து நிறுத்தியுள்ளது. என் மீதும், பாஜக மீதும் அவர்களுக்கு பிரச்சினை இருந்தால், அதை நான் புரிந்து கொள்கிறேன். ஆனால், அந்த கட்சி வங்க மக்களை துன்புறுத்துகிறது.
நான் உங்களுக்கு ஒரு உதாரணம் சொல்கிறேன். தொலைநோக்குப் பார்வையுடன் மத்திய அரசு மீனவர்களுக்கு உதவ ஒரு டிஜிட்டல் தளத்தை உருவாக்கியுள்ளது. திரிணமூல் காங்கிரஸ் அரசு ஒத்துழைக்காததால், அந்த திட்டத்தின் பலன்களை மேற்கு வங்க மீனவர்களால் பெற முடியவில்லை.
ஊடுருவல்காரர்களைப் பாதுகாப்பதன் மூலம் திரிணமூல் காங்கிரஸ் அரசாங்கம், தேசியப் பாதுகாப்போடு விளையாடுகிறது. வாக்கு வங்கி அரசியலுக்காக நாட்டின் பாதுகாப்பை பலவீனப்படுத்துகிறது திரிணமூல் காங்கிரஸ் அரசு.
வங்கத்தின் எதிர்காலத்தை அழிக்கும் இந்த அரசாங்கத்தை அகற்ற வேண்டாமா? வங்கத்தை காப்பாற்ற வேண்டாமா? நாட்டில் வளர்ச்சிப் பணிகளைத் தடுத்து, ஏழைகளுக்கான நலத்திட்டப் பணிகளுக்குத் தடைகளை உருவாக்கும் எந்த அரசாங்கமும் தண்டிக்கப்படும். நாட்டின் வாக்காளர்கள் இப்போது விழித்துக்கொண்டு விட்டார்கள்.
திரிணமூல் காங்கிரஸின் கொடூர அரசாங்கத்துக்கு, மகா காட்டாட்சிக்கு ஒரு பாடம் புகட்ட வங்க மக்கள் முடிவு செய்துள்ளனர். வங்கத்தில் பாஜக தலைமையிலான இரட்டை இன்ஜின் அரசாங்கம் அமைய வேண்டும்" என தெரிவித்தார்.
முன்னதாக, மேற்கு வங்கத்தின் ஹூக்ளி மாவட்டத்தில் உள்ள சிங்கூரில் ரூ. 830 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும், பாலகாரில் விரிவாக்கப்பட்ட துறைமுக நுழைவாயில் அமைப்புக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.
கொல்கத்தாவில் அதிநவீன மின்சார மோட்டார் படகை தொடங்கிவைத்த பிரதமர், ஜெயராம்பதி - பரோகோபிநாத்பூர் - மைனாபூர் புதிய ரயில் பாதையையும் தொடங்கி வைத்தார்.
கொல்கத்தா (ஹவுரா) - ஆனந்த் விஹார் முனையம்; கொல்கத்தா (சீல்டா) - பனாரஸ்; கொல்கத்தா (சந்திரகாச்சி) - தாம்பரம் அம்ரித் பாரத் விரைவு ரயில் ஆகிய மூன்று அம்ரித் பாரத் விரைவு ரயில்களை பிரதமர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.